தமிழகத்தில் இதுவரை 67 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், 12 மாவட்டங்களில் வீடு வீடாகச் சென்று 4 லட்சம் பேரிடம் மருத்துவ ஆய்வு 

திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது
தமிழகத்தில் இதுவரை 67 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், 12 மாவட்டங்களில் வீடு வீடாகச் சென்று சுமார் 4 லட்சம் பேரிடம் மருத்துவ ஆய்வு செய்து முடிக்கப்பட்டுள்ளது.
கரோனா உறுதி செய்யப்பட்டவர்களைக் கொண்ட 12 மாவட்டங்களில் வீடு வீடாகச் சென்று மக்களுக்கு சளி, காய்ச்சல், இருமல், சுவாசக் கோளாறு இருக்கிறதா என்பதை மருத்துவப் பணியாளர்கள் ஆய்வு நடத்தியுள்ளனர்.
இது குறித்து தமிழக அரசு கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையாக 28.03.2020 அன்று கரோனா வைரஸ் தொற்று நோய் உறுதி செய்யப்பட்ட நபர்கள் வசிக்கும் சென்னை, மதுரை, திருநெல்வேலி, வேலூர், இராணிப்பேட்டை, சேலம், விருதுநகர், ஈரோடு, அரியலூர், தஞ்சாவூர், திருப்பூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 12 மாவட்டங்களைச் சார்ந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மருத்துவக் கல்லூரி முதல்வர்கள், இணை இயக்குனர்கள் மற்றும் துணை இயக்குனர்களுடன் ஆலோசனைக் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று நோய் மேலும் பரவாமல் தடுக்கும் நோக்குடன், கரோனா உறுதிசெய்யப்பட்ட நபர்களின் வீடுகளைச் சுற்றியுள்ள 5 கி.மீ. தொலைவு வட்டத்தை CONTAINMENT ZONE ஆகவும், கூடுதலாக 2  கி.மீ. தொலைவு வட்டத்தை Buffer Zone ஆகவும் வரையறுக்கப்பட்டு, இப்பகுதிக்குள் வரும் அனைத்து வீடுகளிலும் சுகாதாரகுழுக்கள் வீடுவீடாகச் சென்று தனிமைப்படுத்தல் மற்றும் நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொண்டு இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் உள்ள நபர்களை கண்டறியும் பணியினை மேற்கொண்டனர்.
மேலும்,நோய் தொற்று கண்டறியப்பட்ட நபரின் தொடர்பிலிருந்த நபர் யாரேனும் இப்பகுதிக்குள் இல்லை என்றால் அவர் எங்குள்ளார் என்பதையும் கண்டறிந்து தனிமைப்படுத்தல் பணி மேற்கொள்ள தொற்று நோய் கட்டுப்படுத்துதல் திட்டம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
அதனடிப்படையில் நேற்று (30.03.2020) வரை 12 மாவட்டங்களில், 2,271 களப் பணியாளர்கள் வாயிலாகக் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. இப்பணியில் 1,08,677 வீடுகளில், 3,96,147 நபர்களிடம் ஆய்வுமேற்கொள்ளப்பட்டது என்று மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!