தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 23 ஆக உயர்வு

திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியாவில் நேற்று நள்ளிரவு முதல் 21 நாட்கள் வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது என பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு வெளியிட்டார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.  விமான நிலையங்களில் 2 லட்சத்து 9 ஆயிரத்து 163 பேருக்கு முதற்கட்ட பரிசோதனை செய்யப்பட்டது. 15,298 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். கொரோனா பாதித்த நாடுகளில் இருந்துவந்த 43 பயணிகள் முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
இதுவரை 743 பேருக்கு ரத்த பரிசோதனை செய்ததில் 608 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்தது. 120 பேருக்கு முடிவுகள் இன்னும் வரவில்லை. தமிழகத்தில் நேற்று முன்தினம் 12 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது.  இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 18 ஆக உயர்ந்தது.
இதையடுத்து அவர்கள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர்.  இந்நிலையில், நேற்று வெளிவந்த பரிசோதனை முடிவுகளின்படி, புதிதாக சேலத்தில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
அந்த 5 பேரில், 4 பேர் இந்தோனேசியாவை சேர்ந்தவர்கள்.  ஒருவர் சுற்றுலா வழிகாட்டியாக இருந்தவர்.  கடந்த 22ந்தேதியில் இருந்து 5 பேரையும் தனிமைப்படுத்தி, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.கொரோனா உறுதியான 5 பேரும் சேலம் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனை தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.  இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரம் வருமாறு : கடந்த 28ம் தேதி ஓமனில் இருந்து சென்னை வந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த 45வயது இளைஞர்க்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இரண்டாவதாக டெல்லியில்  இருந்து ரயில் மூலம் சென்னை வந்த இளைஞருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைதொடர்ந்து அயர்லாந்தில் இருந்து சென்னை வந்த 21 வயது இளைஞருக்கும், நியூசிலாந்தில் இருந்து சென்னை வந்த 65 வயதுடைய முதியவருக்கும், தாய்லாந்தில் இருந்து ஈரோடு வந்த 65 வயது மற்றும் 75 வயதுடைய இரண்டு முதியவர்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதைதொடர்ந்து ஸ்பெயினில் இருந்து டெல்லி, பெங்களூரு வழியாக கோவை வந்த 32 வயது பெண், துபாயில் இருந்து மதுரை வந்த 43 வயதுடைய ஆண், அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த 64 வயதுடைய பெண் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்தார். லண்டனில் இருந்து சென்னை வந்த புரசைவாக்கத்தை சேர்ந்த 25 வயது இளைஞர், லண்டனில் இருந்து திருப்பூர் வந்த 48 வயதுடைய ஆண், மதுரை அண்ணாநகரை சேர்ந்த 54 வயதுடைய ஆண் ஆகிய மூன்று பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று பேரும் சென்னை ராஜிவ்காந்தி, திருப்பூர் இஎஸ்ஐ, மதுரை ராஜாஜி மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  கொரோனாவால் பாதிக்கப்பட்ட மதுரை அண்ணாநகரை சேர்ந்தவர் வெளிநாடுகளுக்கோ, வெளி மாநிலங்களுக்கோ செல்லாதவர். அப்படியிருந்தும் அவர் கொரோனா வைரஸால் தாக்கப்பட்டு இன்று அதிகாலை உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து அமெரிக்காவிலிருந்து வந்த இருவருக்கும், சுவிட்சர்லாந்தில் இருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா  தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. அமெரிக்காவிலிருந்து திரும்பிய 74 வயது முதியவருக்கும், 52 வயது பெண்ணுக்கும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல ஸ்விட்சர்லாந்தில் இருந்து வந்த 25 வயதான பெண்ணுக்கு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!