அரசினால் 31ஆம் திகதி வரை 144 தடை உத்தரவு !!

உலகை அச்சுறுத்தி வரும் கோரோனா வைரசின் கோரப்பிடியில் இருந்து தப்பிக்க முடியாமல் மனித சமுதாயம் திணறி வருகிறது. இந்த வைரசை கட்டுப்படுத்தும் மருந்துகள் இன்னும் விற்பனைக்கு வராத நிலையில், வைரஸ் பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக கைகளை அடிக்கடி கழுவுதல், நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி உரிய சிகிச்சை அளித்தல், ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்த்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளால் சமூக தொற்று பெருமளவில் குறைக்கப்படுகிறது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டு தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டு உள்ளன. மென்பொருள் நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களை வீடுகளில் இருந்து வேலை செய்ய அனுமதித்து இருக்கின்றன.
கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியாக பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று, நேற்று நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு நடைபெற்றது. நாடு முழுவதும் வருகிற 31-ந் தேதி வரை பயணிகள் ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் அண்டை மாநில எல்லைகள் ‘சீல்’ வைக்கப்பட்டு, அந்த மாநிலங்களுக்கு பஸ் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. சென்னையில் மெட்ரோ ரெயில் சேவையும் நிறுத்தப்பட்டு உள்ளது.
கொரோனா வைரசை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் 75 மாவட்டங்களை தனிமைப்படுத்த மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. இந்த மாவட்டங்களில் ஊரடங்கை கடுமையாக பின்பற்றுமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட வேண்டிய மாவட்டங்களின் பட்டியலில் தமிழகத்தில் உள்ள சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் நாளை மாலை முதல் மார்ச் 31-ம்  தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டார். அத்தியாவசிய துறைகள் தவிர்த்து மற்ற அலுவலங்கள் இயங்காது என்றும் அறிவித்துள்ளார்.
‘தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. நோயை எதிர்கொள்ள எல்லா நிலையிலும் தயார் நிலையில் இருக்கிறோம். கொரோனா மேலும் பரவாமல் தடுப்பதற்காக மாவட்ட எல்லைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31ந்தேதி வரை அனைத்து மாவட்ட எல்லைகளையும மூட வேண்டும். இந்த 144 தடையால் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படாது’ என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேபோல் புதுச்சேரியில் இன்று இரவு 9 மணி முதல் மார்ச் 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!