கொரோனா வைரஸ் மருந்து…? சிறுநீர், சாணத்தின் விலை திடீர் அதிகரிப்பு…!

கொரோனாவை குணப்படுத்தும் என்று சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவி வரும் நிலையில், மேற்கு வங்கத்தில் மாட்டின் சிறுநீர் மற்றும் சாணத்திற்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வேகமாக பரவிவருகிறது. மத்திய அரசின் தகவல்களின்படி தற்போது வரை 142 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும், இன்றைய தினம் அந்தந்த மாநில அரசுகள் வெளியிட்டுள்ள தகவல்களின் படி இந்த எண்ணிக்கை 150-ஐ கடந்துள்ளன.

தேசிய பேரிடராக கொரோனா பாதிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள் என்று பொது மக்கள் கூடும் இடங்கள் மூடப்பட்டுள்ளன.

மக்களும் கூட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டு ஏற்கனவே மூன்று பேர் உயிரிழந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரும் இன்று உயிரிழந்துள்ளார். மேலும், ஈரானில் இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெளியுறவுத்துறை இன்று தெரிவித்துள்ளது.

இதன்மூலம், வைரஸ் பாதிப்புக்கு உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது. இதற்கிடையே, கொரோனாவுக்கு மருந்து என்று மாட்டுக்கோமியம், சாணம், பூண்டு, வெங்காயம் என்று பல பொருட்களை சமூக வலைதளம் மூலமாக பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

மேற்கண்ட எதுவும் கொரோனாவை குணமடையச் செய்யும் என்று அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. எனினும், இதுபோன்ற வதந்திகள் தொடர்ந்து வருகின்றன.சமீபத்தில் உத்தரபிரதேசத்தில் அகில இந்திய இந்து மகாசாபா, கோமியம் பார்ட்டி நடத்தி, பலரையும் அதனை குடிக்க வைத்தனர். நேற்று, மேற்கு வங்கத்தில் பாஜக நிர்வாகி ஒருவர், காவலருக்கு கோமியத்தை கட்டாயப்படுத்தி குடிக்க வைத்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், வாட்ஸ் அப் வதந்திகளை நம்பி, மாட்டின் சிறுநீர், கோமியம் ஆகியவற்றின் விற்பனையும் மேற்கு வங்கத்தில் சூடுபிடித்துள்ளது. கொல்கத்தாவில் இருந்து  10 கி.மீ தூரத்தில் இருக்கும், டான்குனி என்ற பகுதியில் ஒரு லிட்டர் மாட்டு சிறுநீர் ரூ.500 வரை விற்பனை ஆவதாக கூறுகிறார், மாடு வளர்க்கும் மாபுத் அலி, மேலும் ஒரு கிலோ மாட்டுச்சாணமும் இதே விலைக்கு விற்பனையாவதாக கூறுகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!