கொரோனா வைரஸ் எங்களைப் பாதிக்காது ! -நித்யானந்தா

கொரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லை என்றும் பரமசிவன் தங்களைப் பாதுகாக்கிறார் என்றும் நித்யானந்தா கூறியுள்ளார்.

ஸ்ரீகைலாசா நாட்டின் பிரதமர் என்று தன்னைத்தானே அறிவித்துக்கொண்ட நித்யானந்தா நேற்று தனது ‘ருவிட்டர்’ பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவில், “கொரோனா வைரஸால் நாங்கள் பாதிக்கப்படவில்லை. இது எதிர்காலத்திலும் எங்களுக்கு வராது. ஏனென்றால் பரமசிவன் எங்களைப் பாதுகாக்கிறார். காலபைரவர் எங்களுக்கு பாதுகாவலாக உள்ளார்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சர்ச்சைகளுக்கு பெயர் பெற்ற சாமியார் நித்யானந்தா மீது கடத்தல், கற்பழிப்பு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. கடத்தல் வழக்கில் குஜராத் பொலிஸார் நித்யானந்தாவை தேடியபோது அவர் பெண் சீடர்களுடன் வெளிநாடு தப்பி ஓடியது தெரியவந்தது.

அதன் பின்னர், அவர் ஈக்வேடார் அருகே கைலாசா என்ற பெயரில் ஒரு தீவை அமைத்து தனி நாடாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

கைலாசா நாட்டில் குடியேற 40 இலட்சம் பேர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளதாக நித்யானந்தா வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதற்கிடையே கற்பழிப்பு வழக்கில் நித்யானந்தாவுக்கு வழங்கப்பட்டிருந்த பிணையை இரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் அவரை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

நித்யானந்தாவை கைது செய்ய சர்வதேச பொலிஸாரின் உதவியை இந்தியப் பொலிஸார் நாடினர். இதையடுத்து புளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பித்து நித்யானந்தாவை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!