மருத்துவ குணம் நிறைந்த வேம்பு

மூலிகைத் தாவரங்களுள் ஒன்றான வேம்பு பண்டைய காலம் தொட்டு இன்று வரை பல்வேறு நோய்களுக்காண நிவாரணியாக கருதப்படுகின்றது. வேப்ப மரத்தின் பட்டை, இலை, பூ, காய் என அனைத்து பகுதிகளுமே பல்வேறு முறைகளில் இயற்கை மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றது.

வேம்பின் இலை

 • வேப்பிலையை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சக்கரை நோய் உள்ளவர்களுக்கு இரத்தத்தில் சக்கரையின் அளவு குறையும்.
 • வேப்பிலையை காலையில் டீயுடன் சேர்த்து அருந்தினால் சாதாரண சளி, இருமல் என்பன குறையும்.
 • தினமும் வேப்பம் இலைகள் சிலவற்றை நீரில் போட்டு வைத்து ஒரு மணி நேரம் கழித்து குளித்து வந்தால் தோல் நோய்கள் அணுகாது.
 • வேப்பம் இலைக் கொத்துக்கள் நான்கினை எடுத்து அதன் தண்டு மட்டும் வெந்நீரில் படுமாறு போட்டு கால் மணி நேரம் ஊற வைத்து பிறகு அந்த சாற்றை இரண்டு நாட்கள் காலையும் மாலையும் குடித்து வந்தால் வயிற்று எரிச்சல் நீங்கும்.
 • வேப்பிலையுடன் பசு மோர் கலந்து அரைத்து தீக்காயம் பட்ட இடத்தில் பூசினால் காயம் ஆறிவிடும்.
 • வேப்பிலையை கொதிக்க வைத்து அந்நீரில் முகம் கழுவினால் முகம் பளபளப்படையும்.
 • மாதவிலக்கின் போது வயிற்றுவலியால் அவதிப்படுபவர்கள் வேப்பிலையுடன் சிறிதளவு மஞ்சள் சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைத்து அருந்தினால் வயிற்றுவலி வலி குணமாகும்.
 • தலையில் நீர் கோர்த்து அவதிப்படுபவர்கள் வேப்பிலையுடன் மஞ்சள் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து ஆவி பிடித்தால் தலைவலி குணமாகும்.
 • வேப்பிலையையும் மிளகையும் சேர்த்து சிறிதளவு உப்புக்கலந்து அரைத்து ஒரு நாளைக்கு இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள கிருமிகள் மடியும்.
 • வேப்பில்லையுடன் சந்தனம் சேர்த்து அரைத்து உடல் முழுவதும் பூசினால் அம்மைக் காய்ச்சல் ஏற்பட்டவருக்கு விரைவில் குணமடையும்.
 • ஒரு பிடியளவு வேப்பிலையில் கசகசா, கஸ்தூரி மஞ்சள் சிறிது சேர்த்து மைபோல அரைத்துப் பூசி ஒரு மணி நேரம் கழித்து கழுவினால் அம்மையினால் ஏற்பட்ட வடு மறையும்.
 • பசி இல்லாது உடல் மெலிந்திருப்பவர்கள் வேப்பிலை ஒரு கைப்பிடியில் பூண்டு பத்துப்பல், சீரகம் சிறிதளவு சேர்த்தரைத்து தினமும் காலையும் மாலையும் என்றவாறு 20 நாட்கள் சாப்பிட்டு வர வயிற்றுப் பிரச்னை தீரும். பசியைத் தூண்டும்.
 • வேப்பிலை, மஞ்சள் இரண்டும் சேர்த்து அரைத்துப் பூசினால் பித்த வெடிப்பு, கால் பாத எரிச்சல் குணமாகும். நகச்சுத்திக்கு பற்றுபோட்டால் குணமாகும்.

வேப்பம் பூ

 • பித்தப் பிரச்சினை மற்றும் கிருமியால் அவதிப்படுபவர்கள் வேப்பம் பூவை சமைத்துச் சாப்பிட்டால் உடலில் ஏற்படும் அதிகப்படியான பித்தம் குறையும்.
 • வேப்பம் பூவை உலர்த்தி பொடியாக்கி மஞ்சள் தூளுடன் கலந்து உடம்பில் தேய்த்துக் குளித்து வந்தால் தோல் வியாதிகள் நீங்கி விடும்.
 • வேப்பம் பூவை நன்கு உலர்த்தி பொடியாக்கி அதனை தணலில் போட்டு தினமும் வீடு முழுவதும் புகையை பரவ விட்டால் விஷப்பூச்சிகள்,நுளம்பு,மூட்டைப்பூச்சித் தொல்லைகள் ஒழிந்துவிடும்.
 • வேப்பம் பூவை இலேசாக வாட்டி தலையில் கட்டிக் கொண்டால் பேன்,பொடுகு,ஈறு போன்றவை குறைந்து விடும்.
 • வேப்பம் பூ ,மிளகு இவை இரண்டும் சேர்த்து அரைத்து பவுடராக்கி சாப்பிட்டால் கர்பப்பை கோளாறுகள் நீங்கும்.
 • வேப்பம்பூ, வேப்ப எண்ணெய் இரண்டும் கலந்து காய்ச்சி காதுக்குச் சொட்டு மருந்தாகப் பயன்படுத்தினால் .காது வலி குறையும்.
 • வேப்பம் பூவையும் எள்ளையும் அரைத்துக் கட்டினால் கொடிய கட்டிகளும் உடனே உடைந்துவிடும்.

வேப்பிலைச் சாறு

 • சிறிதளவு வேப்பிலைச் சாற்றை எடுத்து தயிருடன் கலந்து சாப்பிட்டால் வயிற்றுப் பூச்சிகள் ஒழியும்.
 • வேப்பிலைச் சாற்றுடன் தேன் கலந்து இரவில் உணவுக்குப் பின் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள பூச்சிகள் இறந்தோ அல்லது உயிருடனோ உடலை விட்டு
  வெளியேறும்.
 • வேப்பிலைச் சாற்றுடன் பழச்சாறு கலந்து உறங்கும் முன் குடித்து வந்தால் ஆழ்ந்த உறக்கம் உண்டாகும்.
 • வேப்பிலைச் சாற்றை சிறிதளவு தினசரி குடித்து வந்தால் அலர்ச்சி நீங்கும்.

வேப்பம் பட்டை

 • ஒரு தண்டு வேர்பட்டையுடன் இரண்டு டம்ளர் நீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து பின்னர் அதனை வடிகட்டி இளஞ்சூடான பதத்தில் வாய் கொப்பளித்தால் பல் வலி தீரும்.
 • படை,சிரங்கு போன்றவை குணமாக வேப்ப மரப்பட்டையை காய வைத்து எரிக்க வேண்டும்.எரித்த சாம்பலுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து பாதிக்கப்பட்ட இடங்களில் பூசினால் அவை குணமாகும்.
 • ஒரு துண்டு வேப்பம் பட்டையிலிருந்து தயாரிக்கப்பட்ட பாணத்தை காய்ச்சல் ஏற்பட்ட மூன்று நாட்களுக்கு தினமும் காலையும் மாலையும் குடித்து வர காய்ச்சல் குணமாகும்.
 • அதிகம் முற்றிய வேப்ப மரத்தின் பட்டையை நிழலில் உலர்த்தி பவுடராக்கி அதை பாலுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் நம்புத் தளர்ச்சி நீங்கும்.
 • முதிர்ந்த வேப்ப மரத்தின் பட்டையை உலர்த்தி அதனை இடித்து இரண்டு தேக்கரண்டியளவு எடுத்து தினமும் காலையில் பசு நெய்யிலும் மாலையில் தேனிலும் கலந்து சாப்பிட்டு வர சயரோகம் குணமாகும்.

வேப்பெண்ணெய்

 • இரவில் உறங்கும் முன் வேப்பெண்ணெய்யை தடவி காலையில் எழுந்ததும் சுத்தமாக கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் சொரியாசிஸை
  குணப்படுத்தலாம்.
 • வேப்ப எண்ணெயுடன் தூய தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை 1:4 என்ற விகிதத்தில் கலந்து உடலில் தேய்த்தால் பூச்சிகள் மற்றும் நுளம்புக்கடியில் இருந்து தப்பிக்கலாம்.
 • வேப்ப எண்ணெயுடன் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயிலை கலந்து தலைக்கு தடவி ஒரு மணி நேரம் ஊறவைத்த பின்னர் குளிக்கவும்.தொடர்ந்து மூன்று வாரங்களுக்கு இப்படி தேய்த்துக் குளித்து வர நீண்ட நாட்களாக இருந்து வந்த ஈறு, பொடுகு மற்றும் பேன் தொல்லைகள் நீங்கி ஆரோக்கியமான பளபளப்பான தலைமுடியை பெறலாம்.

வேப்பம் வித்து

 • வேப்பம்வித்து, மிளகு, கருஞ்சீரகம் மூன்றையும் அரைத்து தேங்காய் எண்ணெய்யில் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் முடி நன்கு செழித்து வளரும்.
 • மூன்று கிராம் வேப்பம் வித்தை சிறிது வெல்லம் கூட்டி அரைத்துக் காலை, மாலையாக 40 நாட்கள் சாப்பிடு வர மூல நோய் தீரும். நீண்ட நாள் சாப்பிட்டு வரத் தோல் நோய்கள், நரம்பு இசிவு, குடல் புழுக்கள் என்பன தீரும்.

 

– எம். பி. சாஹிறா பானு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!