சிறுபான்மையினரின் அச்சங்களை நல்லாட்சி அரசு களையுமா?

 

 (கட்டுரை – ஆதில் அலி சப்ரி)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை முதன்மையாகக்கொண்ட  இணக்கப்பாட்டு அரசாங்கத்தின் ஆட்சி இரண்டு வருடங்களைகு கடந்துள்ளது. நாட்டில் பாரியதோர் மாற்றத்தை விரும்பிய பொது மக்கள் ஜனாதிபதி மைத்திரிக்கும், நல்லாட்சி அரசாங்கத்துக்கும் ஆதரவு வழங்கினர். சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற பேதம் கடந்து நாட்டில் ஒரு மாற்றத்தை விரும்பி மக்கள் வாக்களித்தனர். நல்லாட்சியென்று கூறிக்கொண்டவர்களின் தேர்தல் வாக்குறுதிகளும்சிறந்த எதிர்காலம் மீதான நம்பிக்கையும் மக்கள் மனதில் வளர்ந்திருந்தது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மைக் காலமாக சில திடீர் தீர்மானங்களை மேற்கொள்வதையும், கையொப்பமிடுவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது. ஜனாதிபதியின் தீர்மானங்கள் நாட்டின் ஸ்திரத்தன்மை, இறைமையை பாதுகாப்பதாகவும், மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்டதுமாக இருக்கின்றதா? அல்லது, தனது ஆட்சி, அதிகாரம், அரசியலை பாதுகாத்துக்கொள்வதற்காக மேற்கொள்ளப்படுகின்றதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை சீர்செய்யாது மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களில் பயனில்லை. நாட்டின் 50 சதவீதமான மக்கள்

ஏதோவொருவகையில் வறுமை, தொழில் வாய்ப்பில்லாமை, வாழ்வாதாரம், மீள்குடியேற்றம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நல்லாட்சி அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை சீர்செய்வதாகக் கூறிக்கொண்டு கடந்த இரு வருடங்களும் மேற்கொண்ட வேலைகள் போதிய அடைவை கண்டுள்ளதா? என்பதை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்யவேண்டிய தேவையுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் காணப்பட்ட இலஞ்சம், ஊழல், இனவாதம், அடக்குமுறை போன்றவற்றை இல்லாதொழித்து, குற்றவாளிகளை இனங்கண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டி, மீள்குடியேற்றங்களை பூரணப்படுத்தி நல்லாட்சி நடத்துவதாகக் கூறிக்கொண்டவர்கள் தொடர்ந்தும் முன்னாள் ஆட்சி மற்றும் மஹிந்தவை குறைகூறுவதிலேயே காலம் கடத்துகின்றதை அவதானிக்க முடிகின்றது.

இதுவரை காலமும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசிய கட்சி இணக்கப்பாட்டு அரசியல் குறித்தும் அதனை 2020 வரை அசைக்க முடியாது என்றும் கூறிய ஜனாதிபதி, அண்மைக் காலமாக சுதந்திர கட்சி தனி அரசாங்கம் குறித்து பேசுவதின் மர்மம் என்ன? மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மறந்து, மஹிந்தவை பிரதானமாகக் கொண்ட பொது எதிரணியினரையும் இணைத்துக்கொண்டு சுதந்திர கட்சியைப் பாதுகாக்கும் வேலையின் ஆரம்பமா?

நாட்டில் மீண்டும் இனவாதம் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. ஜனாதிபதியும் சுதந்திரக் கட்சியை பலப்படுத்தும் நோக்கில் பெரும்பான்மையினரின் வாக்குகளை இலக்குவைக்கின்றார். பெரும்பான்மையோரின் வாக்குகளை அடைந்துகொள்ள முன்னாள் ஜனாதிபதி கையாண்ட இனவாதம், வில்பத்து சர்ச்சை போன்றவற்றை  தற்போதைய ஜனாதிபதியும் கையில் எடுத்துள்ளாரா? என்ற அச்சம் சிறுபான்மையினரிடையே எழுந்துள்ளது.

நாட்டில் காலா காலமாக தொடர்ந்த இன முரண்பாடுகள் புதியதோர் அரசியலமைப்பால் தீர்க்கப்படும் என்ற நம்பிக்கை நடுநிலைமையான சிங்கள மற்றும் தமிழ், முஸ்லிம் மக்களிடையே ஆழமாக பதிந்துள்ளதை நினைவுகூருகின்றோம்.

நல்லாட்சி மலரும்போது மக்களுக்களித்த வாக்குறுதிகள், இலஞ்ச, ஊழல் ஒழிப்பு, ஊடக சுதந்திரம், மீள்குடியேற்றம், தொழில்வாய்ப்பு, நீதி, மத உரிமைகளுக்கு பாதுகாப்பு, இனவாத ஒழிப்பு, பொருளாதார ஸ்திரம் போன்றவற்றில் கவனம் செலுத்துவதே நாட்டின் விடிவுக்கான இன்றைய தேவையாகும்.

அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால

சிறிசேன ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் இளைஞர் முன்னணியின் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது, குற்றவாளிகள் தராதரம் பாராது தண்டிக்கப்படுவார்கள் என்றும் நாட்டில் இன, மத பேதம் ஒழித்து நல்லிணக்கம் நிலைநாட்டப்படும் என்றும் கூறியதில் சிறுபான்மையினர் தொடர்ந்தும் நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!