அரசுக்கு நாடாளுமன்றில் நாளை பலப்பரீட்சை; இரகசியமாக வாக்களித்தோருக்கு நாளை பொறி!

Share on facebook
Share on twitter
Share on whatsapp

🔴 ஜனாதிபதி ரணில் தலைமையிலான அரசுக்கு நாடாளுமன்றில் நாளை பலப்பரீட்சை
🔴 ஜனாதிபதி தேர்வின்போது இரகசியமாக வாக்களித்தோருக்கு நாளை பொறி
🔴அவசரகால சட்டத்துக்கு எதிராக வாக்களிக்க சஜித் கூட்டணி முடிவு
🔴டலஸ் தலைமையிலான அணியும் எதிரணியில் அமர்கிறது

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு, நாடாளுமன்றத்தில் நாளை (27) முதல் பலப்பரீட்சையை எதிர்கொள்ளவுள்ள நிலையில், இந்த சவாலில் அரசை மண்கவ்வ வைப்பதற்கான நகர்வுகளில் எதிரணிகள் ஈடுபடவுள்ளன.

நாடாளுமன்றம் நாளை (27) முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன தலைமையில் கூடுகின்றது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பதில் ஜனாதிபதியாக செயற்பட்டவேளை ,பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், கடந்த 17 ஆம் திகதி அவசரகால நிலைமையை பிரகடனப்படுத்தினார்.

அவசரகால நிலைமைப் பிரகடனப்படுத்தப்பட்டு, 14 நாட்களுக்குள் நாடாளுமன்றத்தின் அனுமதி பெறப்படாவிட்டால் அது இரத்தாகிவிடும். எனவே, அவசரகால சட்டத்தை மேலும் நீடிக்க வேண்டுமானால் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் அவசியம்.

அவசர கால நிலைமை பிரகடனம் குறித்த விவாதம் நாளை மாலைவரை நடைபெறவுள்ளது. அதன்பின்னர், அவசரகால சட்டத்தை நீடிப்பதற்கு வாக்கெடுப்பை நடத்துமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கோரவுள்ளது.

இரகசிய வாக்கெடுப்பாக அல்லாமல், பெயர் கூவி அல்லது இலத்திரனியல் வாக்கெடுப்பே நடைபெறும். எனவே, வாக்களிக்கும் உறுப்பினர்கள் குறித்து வெளிப்படையாக அறியலாம்.

இதன்போது அவசரகால சட்டத்துக்கு எதிராக வாக்களிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று தீர்மானித்துள்ளது.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் எதிர்த்தே வாக்களிக்கும். வாசு, விமல், கம்மன்பில உட்பட சுயாதீன அணிகளும் அவசரகால சட்டத்தை எதிர்த்தே வாக்களிக்கும்.

நாடாளுமன்றத்தில் நாளை எதிரணி பக்கம் அமரவுள்ள டலஸ் அழகப்பெரும தலைமையிலான மொட்டு கட்சியின் அதிருப்திக்குழுவும், எதிர்த்தே வாக்களிக்கும்.

அவசரகால சட்டத்துக்கு ஆதரவாக வாக்களிக்கப்போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்பன அறிவித்துள்ளன. ஜனாதபதி தெரிவின்போது ரணில் விக்கிரமசிங்கவுக்கு நேசக்கரம் நீட்டிய, விக்னேஸ்வரனும் அவசரகால சட்டத்துக்கு எதிராகவே வாக்களிப்பார்.

அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் மூன்று வாக்குகளும் அவசரகால சட்டத்துக்கு எதிராகவே விழவுள்ளன.

நாடாளுமன்றத்தில் நாளை ஆளுங்கட்சிக்கு கிடைக்கும் வாக்குகளின் அடிப்படையில், அரசின் இருப்பு நிர்ணயிக்கப்படும்.

(ஆர்.சனத்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Archives