நுகர்வோர் என்ற வகையில் நாம் எதிர் நோக்கும் பிரச்சினைகளும் அதற்கான தீர்வும்.

பொதுவாக இவ்வுலகில் வாழும் மக்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் நுகர்வோராகக் காணப்படுகின்றோம். உலக நாடுகளில் எந்தவொரு உற்பத்தியாயினும் அது வாடிக்கையாளரை அல்லது பாவனையாளரை மையப்படுத்தியே தயாரிக்கப்படுகின்றன. அந்த வகையில் ஒரு பொருளையோ அல்லது சேவையையோ விலை கொடுத்து வாங்கும் போது நாம் நுகர்வோர்
ஆகிறோம்.

முதன் முதலில் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜோன்.எம்.கென்னடி என்பவரே 1962 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி அமெரிக்க பாராளுமன்றத்தில் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பாகவும், நுகர்வோர் உரிமைகள் சட்டம் தொடர்பாகவும் உரையாற்றினார். இவரை நினைவு கூறும் வகையிலேயே ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 15ம் திகதி சர்வதேச நுகர்வோர் உரிமைகள் தினமாக பிரகனப்படுதப்பட்டதுடன் 1986 ஆம் ஆண்டில் நுகர்வோர் தொடர்பான
பாதுகாப்புச் சட்டமும் நிறைவேற்றப்பட்டது.

இலங்கையில் இச்சட்டமானது 2003 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 09ம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையும் தோற்றுவிக்கப்பட்டது. பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையானது 2003 மார்ச் 17 ஆம் திகதி பாராளுமன்றத்தில்
சான்றுப்படுத்தப்பட்ட 2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை சட்டத்தின் மூலம் உரித்தளிக்கப்பட்ட தத்துவங்களுக்கமைவாக 2003 ஜூலையிலிருந்து அதன் தொழிற்பாடுகளை ஆரம்பித்து 1979 ஆம் அண்டின் 1 ஆம் இல. பாவனையாளர் பாதுகாப்பு சட்டம், 1987 ஆம் ஆண்டின் 1 ஆம் இல. நியாய வியாபார ஆணைக்குழு சட்டம் மற்றும் 1950 ஆண்டின் விலைக் கட்டுப்பாட்டுச் சட்டம் ஆகியவற்றை இரத்து செய்ததுடன் புதிதாக ஏழு விடயங்களையும் சேர்த்துக் கொண்டது.தற்போது இச்சபை கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் கீழ் இயங்குவதுடன் திரு. டபிள்யூ. ஹசித திலகரட்ண இதன் தலைவராகவும் பணியாற்றுகின்றார்.

அடுத்து நுகர்வோர் என்ற வகையில் நாம் ஒவ்வொருவரும் நுகர்வோர் தொடர்பான
உரிமைகள், கடமைகள் எவை என்பது பற்றி அறிந்திருத்தல் அவசியமாகும். ஜோன்.எம். கென்னடியின் அறிக்கையின் படி ஒரு நுகர்வோன்,

 • உயிருக்கும் சுகாதாரத்திற்கும் ஆபத்தை உண்டு பண்ணக்கூடிய பொருட்களை
  நுகர்வதில் இருந்து பாதுகாப்புப் பெறுதல்.
 • விரும்பிய இடத்தில் பல்வேறுபட்ட வகையான பொருட்கள், சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கும்,போட்டிச் சந்தையில் அரசாங்க விதிகளிற்கு உட்பட்ட தரமான நம்பிக்கையான பொருட்களையும் சேவைகளையும் சந்தை விலையில் பெற்றுக் கொள்ளல்.
 • பொருள் பற்றிய தகவல்கள், விலை, நிறை, தரம் போன்றவற்றின் உண்மைத்தன்மையை அறிந்து கொள்வதற்கும்,தவறான தகவல்களை அறிந்து சரியான தெரிவுகளை தேர்வு செய்தல்.
 • ஒரு குறிப்பிட்ட அரசாங்கம், பொருட்கள், சேவைகள் தொடர்பாக வெளியிடும் அறிவித்தல்கள், நியாய விலைகள், பொருட்களின் தரம் என்பன தொடர்பாக அவ்வரசாங்கத்தின் ஆட்சி எல்லைக்குள் வசிக்கும் நுகர்வோரால் அறிந்து கொள்ளல்.

போன்ற நான்கு வகையான அடிப்படை உரிமைகளையும்,

 • அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்து கொள்ளல்.
 • நட்ட ஈட்டினை அல்லது நிவாரணத்தினை பெற்றுக் கொள்ளல்.
 • சூழல் பாதுகாப்பினைப் பெற்றுக்கொள்ளல்.
 • சுமுகமான சூழலில் வாழ்தல்.

போன்ற ஏனைய உரிமைகளையும் பெற்றுக் கொள்கின்றான்.

அதே போல ஒரு நுகர்வோனாகக் கருதப்படும் ஒவ்வொரு குடிமகன் மீதும் சில கடமைகளும் உள்ளன.

 • தாம் பெற்றுக் கொள்ளும் பொருளுக்கு வர்த்தகரிடம் இருந்து கிடைக்கும் விலைப் பற்றுச்சீட்டுப் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தல்.
 • அனுமதிப்பத்திரம் பெற்ற தரப்புகளுடனும் அவற்றின் அதிகாரம் அளிக்கப்பட்ட அலுவலர்களுடனும் ஒத்துழைப்பான முறையில் நடந்துகொள்ளுதல்.
 • அனுமதிப்பத்திரம் பெற்ற தரப்புகளுடன் செய்துகொள்ளப்பட்ட வரித்தீர்வை ஒப்பந்தங்களின் நியதிகள் மற்றும் நிபந்தனைகள் என்பவற்றுக்கு இயைந்தொழுகுதல்.
 • எந்தப் பொருள் வாங்குவதற்க்கு முன்பும் அந்தப் பொருள் வாங்குவதோடு அது சம்பந்தமான பத்திரங்களில் கையெழுத்திடும் போது ஒன்றுக்கு இரண்டு தடவை படித்துப் பார்த்தல்.

ஒரு நுகர்வோன் என்ற வகையில் தனி மனிதனானவன் மருத்துவம், உணவு, போக்குவரத்து, உடை, காப்பீடுகள், அஞ்சல் சேவைகள் போன்ற பல்வேறு வகையான பணம் கொடுத்து பெரும் அனைத்து சேவைகளிலுமே முக்கிய பங்காளனாக காணப்படுகின்றான். ஒரு பொருளை கொள்வனவு செய்யும் வேளையில் அதற்குத்தகுந்த முறையில் வர்த்தகர்களிடம் இருந்து மதிப்பையும் மரியாதையையும் பெற்றுக்கொள்ளவும் செய்கின்றான். ஆனால் இன்றைய நவீன கால கண்ணோட்டத்தில் பார்க்கும் போது சில இடங்களில் வர்த்தகர்களினால் நுகர்வோர் தரக்குறைவாகப் பேசப்படுதல், இழிவுபடுத்தப்படுதல், அவர்களுக்கு உரிய சேவை கிடைக்காமல் போதல், தாம் பெற்ற பொருளில் மோசடி, ஏமாற்றம் போன்ற சில பிரச்சினைகளுக்கும் ஆளாகின்றனர். மேலும் விவசாய விதைகளின் தரத்தில் குறைபாடு, மின் இணைப்பு வழங்குவதில் குறைபாடு, கல்வி நிறுவங்களின் சேவை குறைபாடு, வங்கி மற்றும் அஞ்சல் சேவை குறைபாடு போன்றவற்றிலும் பிரச்சினைகளுக்கு உள்ளாகின்றான்.

அந்த வகையில் ஒரு வர்த்தகர் உற்பத்தி செய்யும் பொருளானது சுத்தமாக, சுகாதாரத்திற்கு உட்பட்டதாக, தரமான மற்றும் நியாய விலையில் கிடைக்கக்கூடியதாக, தாம் விற்கும் பொருளில் உள்ள பாகங்களில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அதை சீர் செய்வது தொடர்பான உறுதி (வாரண்டி) என்பன உள்ளடங்கியதாக இருத்தல் அவசியமாகும். இவ்வாறில்லாத பொருட்களின் உற்பத்தி தொடர்பில் வர்த்தகர் ஒருவருக்கு எதிராக நுகர்வோர் பாவனையாளர் அலுவல்கள்
அதிகாரசபையிடம் தொலைபேசி மூலமாகவோ அல்லது தபால் மூலமாகவோ தனது
முறைப்பாடுகளை முன் வைக்க முடியும். இவ்வாறு முறைப்பாடுகள் கிடக்கப்பெறுமிடத்து நுகர்வோர் அதிகார சபையானது இரு முக்கிய ஒழுங்கமைப்பு நிறுவனங்களான சுகாதார அமைச்சுடனும் சுங்கத் திணைக்களத்திடனும் இணைந்து இலங்கை முழுவதும் உள்ள வர்த்தக நிலையங்களில் திடீர் சோதனைகள் மேற்கொண்டு பாவனையாளர் அதிகார சபைச்சட்டத்தின்
ஏற்பாடுகளுக்கு அமைவாக விபரச் சீட்டு தொடர்பான அறிவுறுத்தல்களை மீறுதல், குறிப்பிடப்பட்டுள்ள விலைக்கு மேல் பொருட்களை விற்பனை செய்தல், பொருட்களை விற்பனை செய்ய மறுத்தல், பதுக்கி வைத்தல்,அதிகார சபையின் எழுத்து மூலமான அங்கீகாரம் பெறாமல் பொருட்களின் சில்லறை மற்றும் மொத்த விலைகளை அதிகரித்தல், விலைப்பட்டியலை காட்சிக்கு வைக்காதிருத்தல், வாங்கிய பொருட்களுக்கு பற்றுச்சீட்டு வழங்காதிருத்தல், ஏமாற்றுதல், பிழையான பிரதிநிதித்துவம், காலாவதியான பொருட்களை விற்பனை செய்தல், உணவுப் பொருட்களில் சேர்க்கப்படாத இரசாயனங்களை பயன்படுத்தல் போன்ற இன்னோரன்ன சட்ட மீறல்கள் தொடர்பில் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு தவறிழைக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்டத்தின் 60 ம் பிரிவின் கீழ் நீதவான் நீதி மன்றங்களில் வழக்கு தொடரப்பட்டு தண்டப்பணமும் அறவிடப்படும்.

இதற்கிணங்க இறுதியாக இலங்கையில் 2014 ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் தொர்பான அறிக்கையின் படி மொத்தமாக 20,204 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு பதியப்பட்டதுடன் மொத்தமாக 72,296,870 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமாகவும் அறவிடப்பட்டுள்ளது.அதே நேரம் நுகர்வோரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் அதிகமாக 1149 முறைப்பாடுகள் தபால் மூலமகவே கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்படத்தக்க அம்சமாகும். இதேவேளை பாவனையாளர் அதிகார சபை நுகர்வோரின் நலன்களை கருத்தில்
கொண்டு பல்வேறு வகையான செயற்திட்டங்களை மேற்கொண்டுள்ளது.

 • ஆபத்தான மற்றும் தரக்குறைவான பொருட்களிலிருந்தும் சேவைகளிலிருந்தும் பாவனையளரை பாதுகாத்தல்.
 • இறக்குமதி செய்யப்பட்ட தரக்குறைவானபொருட்கள் மீதான கண்காணிப்பு
 • நியாயமற்ற வர்த்தக செயற்பாடுகள், ஏமாற்றுச் செயற்பாடுகள் போன்றவற்றிலிருந்து பாவனையாளரை பாதுகாத்தல்.
 • பாவனையாளரின் முறைப்பாடுகளை கையாளுதல்
 • பாவனையாளர் கல்வி மற்றும் வலுவூட்டல்.
 • போட்டித்தன்மையை ஊக்குவித்தல்
 • நியாயமான விலையை உருதிப்படுத்தல்.
 • ஆளணி ஊக்குவிப்பு மற்றும் நலனோம்பு
 • பாவனையாளர் அறிவூட்டல்
 • நுகர்வோர் சங்கங்கள் நிறுவுதல்

போன்றனவாகும்.

எனவே நுகர்வோர் என்ற வகையில் தாம் விரும்பும் பொருட்களை விலை கொடுத்து வாங்குவோர் நியாயமான முறையில் தமது சேவைகளை பெற்றுக்கொள்ளவும் அது மீறப்படுமிடத்து முறைப்பாடுகள் சமர்ப்பிப்பதன் மூலம் வர்த்தகர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்பதும் குறிப்பிட்டுக்கூற வேண்டிய விடயமாகும்.

– எம். பி. சாஹிறா பானு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!