கண்டியை கதறவைத்த இனவாதம்

-கியாஸ் ஏ. புஹாரி-

 

*  முழு இலங்கை முஸ்லிம்களும் அச்சத்தில்

* பாவிகளின் கொடுமையால் பாழாக்கப்படும் பள்ளிவாசல்கள்

* முடக்கப்படுகின்ற முஸ்லிம்களின் வர்த்தகம்

* அழிக்கப்படுகின்ற சொத்துக்கள்

–  தீர்வுதான் என்ன?

– இது மனிதத்தனமா?

–  மடைமைத்தனமா?

அடித்த காயம் ஆறவில்லை அதன் தடயம் அழியுமுன்னே ஆரம்பித்தது அடுத்த காயம். தினம் தினம் அச்சத்தால் வருந்திக் கொண்டிருக்கின்றனர் முஸ்லிம்கள், முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகள் மேலும் மேலும் தலைதூக்கி நிற்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் ஒரு சில இனவாத சதிகார கும்பல்களின் நாசகார வேலைகளால் ஒவ்öவாரு உள்ளங்களும் துடிதுடிக்கின்றன.

பள்ளிவாசல்கள் உடைக்கப்படுவதும், வீடுகள், தொழில் நிறுவனங்கள் அடித்து உடைக்கப்பட்டு தீக்கிரையாக்கப்படுவதும் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றே.

அண்மையில் அம்பாறையில் ஒரு சம்பவத்தை சித்தரித்து சிலரால் மேற்கொள்ளப்பட்ட வன்முறையின் பின்னணியின் தொடரில் இன்று கண்டி மாவட்டத்தில் இடம்பெற்ற அராஜக வெறியாட்டம் முழு இலங்கையையுமே அச்சத்திலும், ஆழ்ந்த கவலைக்குள்ளும் அமர்த்தியுள்ளது.

 

கடந்த திங்களன்று (05) பிற்பகல் வேளை ஒருவித துயரத்தின்பால் அனைவரினதும் திசைகளும் திரும்பின. தெல்தெனிய திகண பிரதேசத்தில் இடம்பெற்ற ஒரு சதிகாரக்கும்பலின் திட்டமிட்ட சதியானது இன ரீதியிலான கலவரத்தையே விரூட்சமாக்கியது.

உண்மையில் அத்தினத்திற்கு 10 நாட்களுக்கு முன்னர் குமாரசிங்க என்ற சிங்கள சகோதரருக்கும் 03 முஸ்லிம் நபர்களுக்குமிடையில் இடம்பெற்ற மோதல் இந்தளவு பூதகரமாகுமா? என்று எண்ணிப் பார்த்தால் கற்பனையில் கூட அது சாத்தியமற்றதே. இது திட்டமிட்டே சில விஷமிகளால் தொடரப்பட்ட சதி என்றுதான் கூறவேண்டும்.

அன்றைய தினம் லொறியொன்றை பின்னோக்கி நகர்த்தும்போது முச்சக்கர வண்டியின் கண்ணாடியை உடைத்துள்ளது. அந்த நேரம் குடிபோதையில் இருந்ததாக கூறப்படும் அந்த 3 முஸ்லிம் நபர்களும் குமாரசிங்க எனும் சகோதரனுடன் கைத்தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் இங்கு ஒரு விடயத்தை குறிப்பிட்டுக் கூறவேண்டும். அதாவது, முஸ்லிமானவர் மது அருந்துவது ஹராமான காரியம் என்பதால் குடிபோதையில் இருந்திருந்த அந்த நபர்கள் செய்த செயலை முஸ்லிம்களே வன்மையாகக் கண்டிக்கின்றனர்.

அதற்காக அந்த குறிப்பிட்ட நபருக்கு ஏதாவதொரு வகையில் தண்டனை வழங்கியிருந்தால்கூட பரவாயில்லை. மாறாக அந்த நிதானமற்றவர்களின் செயலினால் முழு முஸ்லிம்களையுமே பிழையாக சித்தரிப்பது நியாயமில்லை.

அதே போல், அந்த விபத்தை காரணமாகவும், சாதகமாகவும் பயன்படுத்தி இனவாத வன்முறையை வெடிக்கச் செய்த ஒருசில காடையர்களின் செயல்களினால் அனைத்து சிங்கள மக்களையுமே பிழையாக சித்தரிப்பதும் நியாயமற்றதே.

ஆனால், இந்த விடயத்தை பொறுத்தவரையில் தங்களுக்கு எப்பொழுது, எந்த வகையிலாவது குழப்பங்களை ஏற்படுத்த சந்தர்ப்பம் அமையுமா என காத்திருந்த இனவாத முதலைகளுக்கு இரையாக கிடைத்த தருணமே அந்த விபத்தும், விபத்தோடு இடம்பெற்ற கைத்தகராறும்.

கைத்தகராறின் விளைவாக விபத்தின் 10 நாட்களின் பின்னர் உயிரிழந்த அந்த சிங்கள சகோதரரின் இறுதிக்கிரியை கடந்த 05 ஆம் திகதி இடம்பெற்றது. இறுதிக்கிரியை நடைபெற்று முடிந்த கையோடு ஒரு சிலர் இந்த விடயத்தை பிரதான காரணியாக பயன்படுத்தி திகண பிரதேசத்தில் ஒரு கலவரத்தையே தோற்றுவித்தனர்.

முதலாவதாக தாக்கப்பட்ட திகண பள்ளிவாசல் அதனோடு அதனருகில் இருந்த வீடும் பெற்றோல் குண்டுவீசப்பட்டு சேதமாக்கப்பட்ட வேளையில் அந்த வீட்டிலிருந்த அப்பாவி இளைஞன் அப்துல் பாஸிதின் உயிரையும் காவுகொண்டது. அதனைத் தொடர்ந்து பாட்டம்பாட்டமாக நிமிடத்துக்கொருமுறை முழு இலங்கையையுமே அதிரவைத்துக் கொண்டிருந்தது இந்த விஷமிகளின் அட்டூழியங்கள்.

உடனுக்குடன் சமூகவலைத்தளங்களூடாக சம்பவங்கள் வெளிக்கொண்டுவரப்பட்ட வண்ணமே இருந்தன. ஒவ்வொரு பள்ளிகள், கடைகள், வீடுகள் உடைக்கப்படும்போதும், எரிக்கப்படும்போதும் விடியோவாகவும், புகைப்படங்களாகவும் முழுநாட்டுக்கும் பகிரப்பட்டன. இதன் காரணமாகவே நடந்த நிகழ்வுகள் அனைத்தும் அப்பட்டமாக மக்கள் மத்தியில் அரங்கேற்றப்பட்டன.

இதேவேளை நிலைமை இன்னும் மோசமடையத் தொடங்கிய நிலையில் கண்டி மாவட்டம் முழுவதும் உடனடியாக ஊரடங்குச் சட்டம் அமுலுக்கு வந்தது. ஆனால் ஊரடங்குச் சட்டம் அமுலிலிருக்கும் போதே வன்முறை மேலும் மேலும் தலைவிரித்தாடிய நிலையே காணப்பட்டது.

திகண, தெல்தெனிய, பல்லேகல, தென்னங்கும்பர, கடுகஸ்தோட்டை போன்ற இடங்களிலும் அன்றிரவு மேலும் பல அசம்பாவிதச் சம்பவங்கள் பதிவாகிய நிலையே இருந்தது. அது தொடர்ந்தவண்ணம் சுமார் 4 நாட்களாக தொடர்ச்சியாக அசம்பாவிதங்கள் ஒவ்வொரு ஊர் ஊராக பரவ ஆரம்பித்து விட்டன.

நிலைமை மோசமடைவதை அவதானித்த அரசு முழு நாட்டுக்கும் குறிப்பாக கண்டி மாவட்டம் முழுவதிலுமே ஊரடங்குச் சட்டத்தை அமுலாக்கியிருந்த போதும், இந்த நாசகார இன வெறியாட்டக்கரர்களை கட்டுப்படுத்துவது கடினாமாகிய இந்நிலையில் முஸ்லிம்கள், பாதுகாப்பு படையினர் மீதும், அரசாங்கத்தின் மீதும் தங்களது வெறுப்பை மேலோங்கச் செய்துவிட்டனர்.

நிமிடத்துக்கொருமுறை சட்டென்று உடனுக்குடன் சமூகவலைத்தளங்கள் மூலம் அனைத்து அநியாயங்களும் அம்பலமாகின. ஆனால், அனைத்தையும் தாங்கிய வண்ணம் இன முரண்பாட்டை தாம் வளர்த்துவிடக்கூடாது என்ற மனோபக்குவத்துடன் முஸ்லிம்கள் பொறுமையை கையாண்டனர்.

சம்பவங்களை கேள்வியுற்ற முஸ்லிம் அமைச்சர்களும், எம்.பிக்களும் சம்பவ இடத்திற்கு உடனுக்குடன் ஸ்தலத்திற்கு விஜயம் செய்து பார்வையிட்டனர். ஆனால், அவர்கள் நிற்கும் தருணங்களில்கூட அட்டூழியங்கள் நடந்தவாறே இருந்தன.

மக்களின் கதறல்களும், அழுகுரல்களும் அனைவரின் உள்ளங்களையும் அச்சத்திலும், ஆத்திரத்திலும் ஆளச்செய்த வண்ணமே இருக்கையில் அடுத்தடுத்த ஊர்களில் அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டங்களும், ஹர்த்தால்களும் செய்யத் தொடங்கிவிட்டனர். இதே நேரம் இடம்பெறுகின்ற சம்பவங்களை கண்டித்து வெளிநாடுகளிலிருந்தும் அரசுக்கு அழுத்தங்கள் வர ஆரம்பித்து

விட்டன.  நிலைமைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக உடனடியாக சமூகவலைத்தளங்களையும் அரசு முடக்கம்செய்தது. அதே நேரம் சமூக வலைத்தளங்களினூடாக பதியப்படுகின்ற இனவாத பிரசாரங்களையும் தேடுதல் வேட்டையை ஆரம்பித்து சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்ய கடுமையான சட்டத்தையும் அமுல்படுத்தியது.

எது எவ்வாறு இருப்பினும் இந்த இனவாதக் கும்பலின் அட்டகாசங்கள் ஓய்ந்தபாடில்லை. நான்கு நாட்களாக நாளுக்கு நாள் அதிகரிக்கொண்டே சென்றன. முஸ்லிம் அமைச்சர்களும், மத அமைப்புக்கள், இவர்களோடு பௌத்த தேரர்களையும் இணைத்து பல பேச்சுவார்த்தைகளையும், ஒப்பந்தங்களையும் ஜனாதிபதி, பிரதமருடன் மேற்கொண்டனர்.

ஆனால் எதுவும் திருப்திகரமாக அமையவில்லை. நடப்பவை நடந்து கொண்டே இருந்தன வன்முறை வலுப்பெறுவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் நாடாளுமன்றத்திலும், அமைச்சரவையிலும், ஊடகவியலாளர் சந்திப்புக்களிலும் அரசிடம் அழுத்தங்களும் கேள்விகளும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன.

இவ்வாறான வன்முறையை தூண்டுபவர்கள் யார்தான் என்பது இதுவரை புலப்படாத ஒரு மர்மமாகவே இருந்து கொண்டிருக்கின்றன.

இவற்றை இன்னும் வளரவிட்டால் மிகவும் இக்கட்டான நிலைக்கு இந் நாட்டு முஸ்லிம்கள் தள்ளப்படுவர் என்கின்ற அடிப்படையிலேயே சட்டங்களை வலிமையாக்கி வன்முறையாளர்களை கைது செய்யவும் துணிந்தனர். ஆனால், இங்கு ஒரு விடயத்தை நாம் சிந்திக்கவேண்டிய நிலை உள்ளது.

அன்று திங்கட் கிழமை நிலைமை மோசமடைய ஆரம்பிக்கும் வேளையில் அரசாங்கம் இதே கடுமையான சட்டங்களையும், இராணுவ அதிகாரங்களையும் பயன்படுத்தி நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவராமல் அடிப்ப

தெல்லாம் அடித்து, உடைப்பதெல்லாம் உடைத்து பல கோடி பெறுமதியான சொத்துக்கள் நாசமாக்கப்பட்ட பின்னர் சட்டநடவடிக்கை எனக் கூறுவது. பெரும்பான்மையினருக்குக் கொடுக்கும் சலுகைகளா? அல்லது சிறுபான்மையினர் இந் நாட்டில் ஓரங்கட்டப்படுகின்றார்களா? என எண்ணத்தோன்றுகின்றது.

அதே நேரம் தற்போதைய நிலைமையில் இக் கலவரத்தின் பிரதான சூத்திரதாரி உட்பட இதுவரையில் 145 பேர் கைது செய்யப்பட்டுள்ளமையை பார்க்கும்போது தற்போதைய நிலையில் அரசுக்கும், பொலிஸாருக்கும் நன்றி தெரிவிக்கவேண்டும்.

அத்தோடு, இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் குறிப்பிட்ட காலத்தினுள் பிணையில் விடுதலை செய்யப்படாமல் தக்க விசாரணையின் பின்னர் தகுந்த தண்டனைக்குள் உள்ளாக்கப்பட வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.

இவ்வாறான இனவெறிபிடித்த இனவாத விஷமிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களையும் அவற்றின் விளைவுகளையும் எடுத்து நோக்கினால் திகணயில் இனவாதச் சம்பவங்கள் தொடங்கப்பட்டதிலிருந்து (05.03.2018) இப்போது வரை சிறிய அளவிலோ, பெரிய அளவிலோ தாக்கப்பட்ட பள்ளிவாசல்களின் விபரம்:

திகண ஜும்ஆ பள்ளிவாசல், பல்லேகல பள்ளிவாசல், கட்டுகஸ்தோட்டை குருநாகல் வீதி மஸ்ஜித், கட்டுகஸ்தோட்டை கஹல்ல மஸ்ஜித் (இது முற்றாக உடைத்து, எரித்து சேதமாக்கப்பட்டது), அலதெனிய பள்ளிவாசல், யஹலத்தென்ன பள்ளிவாசல், பெனிதெனிய பள்ளிவாசல், தென்னக்கும்புர பள்ளிவாசல், மெனிக்கின்னே பள்ளிவாசல், வத்தேகம பள்ளிவாசல், எளுகொட பள்ளிவாசல், அக்குரணை வெலேகட பள்ளிவாசல், பேராதெனிய பள்ளிவாயல், வாரியபொல(மாத்தளை) பள்ளிவாசல், குருந்துகொல்ல பள்ளிவாசல் என சுமார் 20 இற்கு மேற்பட்ட பள்ளிவாசல்கள் சிறிய, பெரிய தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளன.

இவைதவிர பல வீடுகள் மற்றும் தொழில்நிறுவனங்கள், கடைகள், வாகனங்கள் எரிக்கப்பட்டு, உடைக்கப்பட்டு சேதமாக்கப்பட்டன. இவ்வாறு இடம்பெற்ற இந்த நாசகார செயல்களினால் கோடிக்கணக்கான சொத்துக்கள் அழிந்துபோயுள்ளதுடன், பல குடும்பங்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் 30 வருட யுத்தம் நிறைவுக்கு வந்ததன் பின்னர் இந் நாட்டு மக்கள் அனைவரும் சுதந்திரமாகவும், சந்தோஷமாகவும் வாழ்ந்து கொண்டிருந்த சூழலில் கடந்த ஆட்சியில் இடம்பெற்ற அளுத்கமை சம்பவத்தை கண்டித்த முஸ்லிம்கள் நல்லாட்சியை தெரிவுசெய்தனர். இன்று வேலியே பயிரை மேய்வது போலாகிவிட்டது.

அன்று அளுத்கமை இன்று அம்பாறை, கண்டி என தொடர்கின்றன. இந்நாட்டில் இனவாதம் தலைதூக்குவதை பெரும்பாலான சிங்கள, தமிழ் சகோதரர்களும் கண்டிக்கின்ற நிலையில் ஒரு சில இனவெறியும், பொறாமைகளும் நிறைந்த விஷமிகளால் மேற்கொள்ளப்படக்கூடிய அட்டகாசங்கள் முழுநாட்டினதும் ஸ்தீரனத்தன்மையையுமே சீர்குலைத்து விட்டது.

குறிப்பாக சொன்னால், கிழக்கிலுள்ள மக்கள் தலைநகர் உட்பட பல ஊர்களிலும் தொழில் நிமித்தமும், ஏனைய அலுவல்களுக்காகவும் செல்வதாக இருந்தால் அதிகமானோர் பயன்படுத்தக்கூடிய பிரயாணப் பாதையென்றால் அது கண்டி ஊடாகத்தான் இருக்கும்.

இவ்வாறான சில விஷமிகளின் வெறியாட்டத்தினால் இடைநடுவே உள்ள காட்டுப்பகுதிகளில் பஸ்கள், வாகனங்கள் போன்றவற்றை தாக்குவது போன்ற அராஜகங்களையும் செய்யத்தொடங்கினர். இதனால் அன்றாட இயல்பு நிலையில் பெரிதும் பாதிப்பும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது.

எந்தநேரமும் எதுவும் நடக்கலாம் என்ற அச்சம் இன்று நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம்கள் மனதிலும் ஆழப்பதிந்து விட்டது. இந் நல்லாட்சியிலும் இனவாதம் அரங்கேறுகின்றதே! என்ற அரசின்மீதான வெறுப்பு முஸ்லிம்களிடத்தில் மேலோங்கி நிற்கின்றது.

அது மாத்திரமன்றி சர்வதேசத்தின் கவனத்தையும் இந்தச் சம்பவங்கள் ஈர்த்துள்ள நிலையில், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசுக்கான தமது ஆதரவை வாபஸ் வாங்கவேண்டுமெனவும், முஸ்லிம் அமைச்சர்கள்  பதவி விலகவேண்டும் என்றும் ஒருசாரார் அறிக்கை விட்டுக்கொண்டிருக்கின்றனர்.

அதேவேளை, இந்தச் சம்பவங்கள் இடம்பெற்ற நாள் தொடக்கம் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும், அமைச்சரவைக்கும், நாடாளுமன்றத்துக்கும் அழுத்தங்களைக் கொடுத்துவரும் முஸ்லிம் அமைச்சர்கள் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர், களத்தில் நின்று போராடி வருகின்றனர்.

பொலிஸ்மா அதிபருடனும், பாதுகாப்புப் படையினருடனும் நேரடியாகத் தொடர்புகொண்டு, பாதுகாப்புக் குறைந்த பகுதிகளில் பாதுகாப்பு படையினரை அமைச்சர்கள் உஷார்படுத்திவருகின்றனர்.

அதுமட்டுமின்றி, ஊரடங்குச்சட்ட வேளையிலும் நடைபெறுகின்ற கலவரங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர களத்தில் நின்று, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைந்துசென்று உரிய நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர் என்பதையும் இந்த இடத்தில் சுட்டிக்காட்டுவது பொருத்தமானது.

அத்தோடு, இன்னுமொன்றை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்; அதாவது மூவின மக்களும் வாழக்கூடிய இந்நாட்டில் இன ஒற்றுமை சமத்துவம் மேலோங்க வேண்டும். அரசும் எவ்வளவுதான் இவற்றை தடுப்பதற்கு வழிகளை மேற்கொண்டாலும் ஒரு சில இனவாத விஷமிகள் ஆங்காங்கே சிறு சிறு பகுதிகளில் தாக்குதல்களை மேற்கொண்டவண்ணமே இருக்கின்றனர்.

அவ்வாறு தாக்குதல்களும், வன்முறைகளும் இடம்பெறுகின்ற இச்சந்தர்ப்பத்திலும் முஸ்லிம்கள் பலவிதத்திலும் தங்களது பொறுமையை காத்தவர்களாக இருக்கின்றனர். பள்ளிகள் உடைக்கப்படுவதற்காக அதற்கு பதிலடியாக யாருடைய மதஸ்தலங்களை முஸ்லிம்கள் சேதப்படுத்தவில்லை. பள்ளிவாசல் என்பது ஒரு புனிதமான இடம் அதே போன்று பௌத்த விகாரைகளும், இந்துக்களின் கோயில்களும், கிறிஸ்தவ தேவாலயங்களும் புனிதமானதும் பெறுமதியானதுமே.

எனவே எவ்வாறான தனிப்பட்ட பிரச்சினைகள், குரோதங்கள் ஏற்பட்டாலும் அதற்குத் பரிகாரமாக அப்பாவி மக்களை தாக்குவதும், மதஸ்தலங்களை உடைத்து நாசமாக்குவதும் தீர்வாக அமையப்போவதில்லை.

அவ்வாறு நிகழும் சந்தர்ப்பங்களில் பாதுகாப்புத்தரப்பினரும், பாதுகாப்பு உயர் அதிகாரிகளும் நீதியாக செயற்படவேண்டும். அது மாத்திரமன்றி இந்நிலைமைகளில் நாட்டின் சட்டமும், ஒழுங்கும் சரியாக பேணப்பட்டு அரசினால் தகுந்த நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படுவதுடன்.

இவ்வாறு இடம்பெற்ற இந்த நாசகார செயலின் பின்னணியில் கைதானவர்களுக்கு தகுந்த தண்டனைகளையும், தீர்ப்பினையும் வழங்குவதன் மூலம் இவர்கள் போன்ற குறுகிய மனப்பாங்குள்ள இனவாத விஷமிகளுக்கு இனிமேல் இது பாடமாகவும் அமையும் என்பதும் இங்கு சுட்டிக்காட்டப்படவேண்டியதொன்றாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!