சர்வதேச கடனுதவிகளை அரசு திட்டமிட்டு கையாளுகின்றதா?


(கட்டுரை – ஆதில் அலி சப்ரி)

இலங்கை பாரிய கடன் சுமை மற்றும் பொருளாதார நெருக்கடியொன்றிற்கு முகங்கொடுத்துள்ளதை நாம் அறிவோம். இலங்கையின் கடன் சுமையை குடிமக்கள் தொகையால் வகுக்கும்போது ஒவ்வொருவரும் தலா நான்கு இலட்சங்கள் அளவில் கடன்பட்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. தாயின் கருவில் இருக்கும் சிசுவுக்கும் கடன் சுமையா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சர் ஆகியோர் எங்கு உரையாற்றினாலும் நாம் பெரும் கடன் சுமையில் இருக்கின்றோம். கடன் சுமையின் காரணமாகவே நாட்டு மக்களுக்கு சலுகைகளையும், தொழில்வாய்ப்புகளையும் ஏற்படுத்திக்கொடுக்க முடியாத நிலைமை காணப்படுகின்றதாகவும் தெரிவிக்கின்றனர்.

ஆட்சியாளர்கள் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி உட்பட மேலும் பல நிதியுதவி மாநாடுகளுக்குச் சென்று, நாடு திரும்பும்போது, அதிகமான கடன், நிதியுதவிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அவற்றை வைத்து நாட்டை அபிவிருத்தி செய்யப்போவதாக வாக்குறுதியளிப்பதும், அரசியல் நடத்துவதும் கண்காட்சியாகின.

முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ தொடக்கம் தற்போதுள்ள ஆட்சியாளர்கள் வரை சர்வதேச கடனுதவிகளைப் பெற்றுக்கொண்டதை பெரும் வெற்றியாக கொண்டாடினர். கடனொன்றைப் பெற்றுக்கொண்டதை வெற்றியாகக் கொண்டாடிய ஆட்சியாளர்கள் இன்று கடனை பெரும் சுமையென்கின்றனர். கடன் பெறும்போது வெற்றியாகக் கொண்டாடியவர்களுக்கு கடன் எவ்வாறு ஒரு சுமையாக மாறியது என்பதை நாடு சிந்திக்க கடமைப்பட்டுள்ளது.
இலங்கை இதுவரையில் பெற்றுக்கொண்டுள்ள கடனுதவிகளால் பயனடையவில்லை. கடனுதவிகளால் முறையான அபிவிருத்தி திட்டங்களையோ, வருமான வழிகளையோ மேற்கொள்ளவில்லை. அபிவிருத்தி திட்டங்களை தேவைகளின் அடிப்படையில் முன்னுரிமை வழங்கி மேற்கொள்ளவில்லை. இறுதியில் தாம் பெற்றுக்கொண்ட கடனுதவிகளால் செய்துமுடித்தவைகள் என்ன என்பதையும் கூறத்தெரியாதவர்களாகவே ஆட்சியாளர்கள் இருக்கின்றனர்.

2016ஆம் ஆண்டு நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க வரவு- செலவுத் திட்டத்தை முன்வைக்கும்போது, இலங்கை 8443 பில்லியன் கடன் சுமையில் இருப்பதாக கூறினார். 2016 மார்ச் மாதமாகும்போது பாராளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நிதியமைச்சரின் அறிக்கையில் இடம்பெறாத புதிய கடன் தொகையாக மேலும் 1030 பில்லியன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தார். அப்போது, பாராளுமன்றத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க ‘இந்த கடன் தொகையாவது சரியானதா? என்று கேட்டபோது, இதுவும் நிச்சயமில்லை என்பதே பிரதமரின் பதில்.

இலங்கையின் உண்மையான கடன் தொகை இவ்வளவுதான் என்பது அரசாங்கத்துக்கோ, ஆட்சியாளர்க
ளுக்கோ, நிதியமைச்சருக்கோ தெரியாத நிலையில் நாடு பயணிக்கின்றது. நாட்டின் சரியான கடன் தொகை எவ்வளவு என்பதை ஆராய சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை வேண்டும் நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது.
கடந்த ஆறு வருடங்களில் நாட்டின் மொத்த வருமானத்தில் 10,000 பில்லியன்களுக்கும் அதிகமாக கடன் செலுத்தப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் 1300 பில்லியன் கடன் செலுத்தவேண்டியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் இந்தியாவின் கடனுதவியில் வடக்கையும் தெற்கையும் இணைக்கும் 265 கிலோ மீற்றர் ரயில் பாதை நிர்மாணிக்கப்பட்டது. 1400 கிலோ மீற்றர்களை நிர்மாணிக்கும் நிதி செலவிடப்பட்டு வெறும் 265 கிலோ மீற்றர்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதும், மாத்தறை பெலியத்தை ரயில் பாதையும், ஹபரனையை தொடர்புபடுத்தும் ஜனாதிபதி மைத்திரியின் ரயில் பாதை உத்தேச திட்டமும் நாட்டில் எவ்வித வருமான, உற்பத்தி வழிகள் இல்லாத திட்டங்களுக்கு கடனுதவிகள் செலவிடப்படுகின்றன என்பதற்கான உதாரணங்களாகும்.
இலங்கை பெற்றுக்கொள்ளும் கடனுதவிகளில் உண்மையான, நாட்டுக்கு தேவையான வருமான வழிகளையும், நிலையான அபிவிருத்தி, பொருளாதார சீர்திருத்தம் போன்றவற்றை திட்டமிட்டு மேற்கொள்ள முயற்சிக்கவேண்டும். அவ்வாறில்லாதபோது குடிமக்கள் கடனுக்கு பொறுப்புகூறவேண்டியதில்லை. மாறாக, கடனுதவிகளை உரிய விதத்தில் பயன்படுத்தாத ஆட்சியாளர்களே பொறுப்பேற்கவேண்டும்.
முன்னுரிமைகளின் அடிப்படையில் அபிவிருத்தி திட்டங்கள் செயற்படுத்தப்படுகின்றபோது கடன் மற்றும் சர்வதேச நிதியுதவிகள் சுமையல்ல, அருள் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!