விட்டுகொடுப்பார்களா சம்மாந்துறை தவிசாளர் கனவை?…

ரசியல் காலநிலை நாட்டிலும் சீராற்று காணப்படுவதோடு, பல பிரதேசங்களிலும் சீரற்றே காணப்படுகின்றது. தேர்தல் காலங்களில் உள்ளுராட்சி தேர்தலை ‘இது ஒரு குட்டித் தேர்தல், இந்த தேர்தல் எமது பிரதேசங்களின் அரசியல் தளத்தை மாத்திரம் உறுதி செய்வதுதான், இந்தத் தேர்தலால் ஆட்சிமாற்றம் ஏற்படப்போவதில்லை’ என்று கூறிய பலரும் வாயடைத்துப் போயிருக்கின்றனர். கடுகு சிறிதென்றாலும் காரம் பெரிதாக இருக்குமென்பதை இந்தத் தேர்தல் உணர்த்தியுள்ள இந்தக் குட்டித் தேர்தலால் இப்படி ஒரு தலையிடிவரும் என்பதை ஜனாதிபதி கூட எண்ணியிருக்கமாட்டார்.

அந்தளவுக்கு இந்தத் தேர்தல் எமது அரசியல் சாணக்கியவாதிகளை சிரமத்துக்குள்ளாக்கி இருக்கின்றது. பல வட்டாரங்களை வென்றும் ஆட்சியமைக்க தடுமாற்றம், விகிதாசரம் கிடைத்தும் ஆட்சியமைப்பதில் திண்டாட்டம். தலைமைகளும், தவிசாளர் கனவுள்ளவர்களும் ஜனாதிபதியின் வாசற்படியில் ஏக்கம், ஜனாதிபதிக்கோ தேசிய அரசின் கெடுபிடி என்ன நடக்கப்போகுதோ?

வாங்கிய வெடிகளும் ஊமை வெடிகள் ஆகிடுமென்று அல்லல்படுகின்றனர் எம் தலைவர்கள். இவை நாடு பூராகவும் உள்ள பிரச்சினை.
இவை ஒருபுறமிருக்க எமது ஊரை சற்று சிந்திப்போமேயானால்:

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி தேர்தலின் பிரகாரம் ஐ.தே.க – 08, அ.இ.ம.க – 08, சு.க. – 04 இந்நிலையில் பிரதேச ஆட்சியை தீர்மாணிக்கும் சக்தியாக சு.கா. இருப்பது குறிப்பிடத்தக்கது. இதே நேரம் இருபக்க கட்சி முக்கியஸ்தர்களும் ஜனாதிபதியுடன் சிநேகபூர்வ பேச்சுவார்த்தைகளிலும் இருக்கின்ற இதே வேளை சட்டம் மற்றும் சாதூரியம் இதுபோன்ற பல விடயங்களினூடாக ஆட்சியமைப்பது ஒருபுறமிருக்க…
இது நமது ஊர், “இந்த ஊரின் வளர்ச்சிக்காகத்தான் நாங்கள் அரசியலுக்கு வந்தோம், பதவிகள் முக்கியமல்ல பணிகளே எமக்கு முக்கியம், கட்சி முக்கியமல்ல மக்கள்தான் எனது கட்சி” இவ்வாறெல்லாம் தேர்தல் காலங்களில் மேடைகளிலும், தங்களது அறிக்கைகளிலும் திடமாக பேசிய எமது தலைமைகள் சற்றுசிந்தித்து ஒன்றுபட்டால் எமது ஊரிலும் ஒரு மாற்றம் காணலாம் தானே!…

அதாவது இந்த கட்டுரை மூலம் நான் கூறவரும் விடயம் இதுதான்:
அ.இ.ம.க + சு.க ஆட்சியமைப்பதா? அல்லது ஐ.தே.க. + சு.க ஆட்சியமைப்பதா என்கின்ற ஐயப்பாட்டை ஒருபுறமாக வைத்துவிட்டு ஐ.தே.க + அ.இ.ம.க ஆட்சியமைத்து சுழற்சி முறையிலோ அல்லது நியாயமான முடிவின் அடிப்படையிலோ தவிசாளரை கொண்டுவந்தால் சிறப்பாக அமையுமல்லாவா?

இன்று சாய்ந்தமருது மக்கள் ஊரே ஒன்றுபட்டு வாக்களித்தாலும் மேயரை பெறமுடியாது என்ற நிலையை அறிந்தும்கூட தங்களுடைய ஊரின் ஒற்றுமையை நிரூபித்து இருப்பது தற்கால அரசியல் சூழ்நிலையில் சாதனையாகவே கருத வேண்டும்.

இதே நிலையை சம்மாந்துறையில் ஏற்படுத்த நமது ஊர் நிர்வாகங்கள் தயங்குவதற்கான காரணம் என்ன? ஏன் இவர்களால் ஊர் அரசியலை ஒற்றுமைப்படுத்தி ஒரு குடையின்கீழ் கொண்டுவர முடியாமல் உள்ளது. இவ்வாறு எடுத்து நோக்கும்போது எமது ஊர் நிர்வாகங்கள்கூட அரசியல்வாதிகளுக்கு அடி பணிந்து அடங்கிப்போவதுபோல் தெரிகிறது.

ஊரின் நிர்வாக சபைகளும், மத அமைப்புக்களும் அமுக்கக் குழுக்கள் என்பதை அவர்கள் உணர்ந்து செயற்பட வேண்டியது காலத்தின் கடப்பாடாகும். இறைவனையன்றி யாருக்கும் அவர்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.

இப்படியான தருணத்தில் பிரதேச ரீதியிலான ஒற்றுமைப்பட்ட முடிவுகளை மேற்கொள்ளும்போது அரசும் அதனை ஆதரிக்க வேண்டிய கடமைப்பாட்டுக்குள் தள்ளப்படும். பல வழிகளிலும் ஊரின் அபிவிருத்திக்கு வழிவகுக்கும்.

இந்நிலையில் கட்சிபேதங்களையெல்லாம் ஓரங்கட்டிவிட்டு ஊர் நிர்வாகங்கள் மற்றும் பொது அமைப்புக்கள் ஒன்றுகூடி அழைப்பு விடுத்தாலும் இம்முறை இரு கட்சிகாளாலும் தவிசாளருக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம். மாஹிர் விட்டுக்கொடுப்பாரா? அல்லது முன்னாள் தவிசாளர் ஏ.எம்.எம். நௌஷாட் விட்டுக்கொடுப்பாரா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!