சாய்ந்தமருது மக்களின் மனச்சாட்சியுடன் பேசுகின்றேன்: வை எல் எஸ் ஹமீட்

எனதருமை சாய்ந்தமருது மக்களே!
தேர்தல் பிரச்சார காலக்கெடு முடிவடையமுன் இப்பதிவைப் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.
நீங்கள் சுயேச்சைக்கு ஆதரவளிக்க விரும்பினால் அது உங்கள் சுதந்திரம். யாரும் தடுக்க முடியாது. ஆனால் உங்களின் ஒரு சகோதரனாக நான் கேட்க விரும்புவது,
உங்களிடம் சுயேச்சைக்கு வாக்கு கேட்பவர்கள் ஊரின் ஒற்றுமைக்காக, ஊரின் தன்மானத்தைக் காக்க வாக்களியுங்கள்; என்கிறார்கள். இவை உணர்ச்சிமிகு வார்த்தைப் பிரயோகங்கள். நீங்களும் உணர்ச்சி வசப்படலாம். ஆனால் இவை எல்லாவற்றினதும் இலக்கு என்ன? சாய்ந்தமருதுக்கு உள்ளூராட்சி சபையைப் பெறுவது.
சுயேச்சைக்கு வாக்களித்தால் எவ்வாறு உள்ளூராட்சி சபை பெறலாம்; என இதுவரை இவர்கள் யாராவது உங்களுக்கு கூறியிருக்கின்றார்களா? ஒற்றுமையினால் நீங்கள் சொல்லப்போகும் செய்தி என்ன? ஒட்டுமொத்த சாய்ந்தமருது மக்களும் தனியான உள்ளூராட்சி சபையை ஆதரிக்கின்றார்கள்; என்பதுதானே! இதை யாராவது இதுவரை மறுத்திருக்கின்றார்களா?
அடுத்த கட்சியில் போட்டியிடுகின்றவர்களும் அதே நிலைப்பாட்டில்தானே இருக்கின்றார்கள். சற்று சிந்தியுங்கள். அவர்கள் சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபை தேவையில்லை; என்று சொன்னால் நீங்கள் மாறி வாக்களித்து உங்கள் கோரிக்கையை நிறுவலாம். எல்லோரும் ஏற்றுக்கொண்ட ஒன்றை நிறுவுவதற்கு என்ன இருக்கின்றது. ஆனால் அவர்கள் கல்முனை மாநகருக்குப் பாதிப்பில்லாத வகையில் சாய்ந்தமருதின் இலக்கை அடைய வேண்டுமென்கிறார்கள். அது தவறென்கிறீர்களா?
அவ்வாறாயின் சுயேச்சைக்கு வாக்களிப்பதன்மூலம் கல்முனையை அந்நியவரிடம் காவுகொடுத்தாவது சாய்ந்தமருதுக்கு சபை பெற்றுத்தரவேண்டுமென்ற செய்தியையா இவ்வாக்களிப்பினூடாக சொல்லப்போகிறீர்கள். நீங்கள் அவ்வாறு சிந்திக்கின்ற மக்கள் இல்லை; என்பது எனக்குத் தெரியும். ஆனாலும் ஒரு வாதத்திற்காக இதனை முன்வைக்கின்றேன்.
அடுத்தது, ‘சாய்ந்தமருது பிரிவதால் கல்முனைக்கு பாதிப்பதில்லை’ என்பதை இத்தேர்தல் மூலம் நிறுவப்போவதாக சிலர் கூறுகின்றனர். இதில் அர்த்தம் இருக்கின்றதா? என சிந்தியுங்கள். ஏனெனில் சாய்ந்தமருது பிரிந்தால் கல்முனை மாநகரசபைக்கான மொத்த ஆசனம் 30. ஆட்சியமைக்க 16 தேவை. தற்போது 21 தேவை. சாய்ந்தமருதில் இருந்து வாக்குப்பிரிந்தால் 21 ஐயோ மேலதிகமாகவோ அடையலாம். பிரியாவிட்டால் பெரும்பான்மை கிடையாது. தேர்தல் மூலம் இவர்கள் நிறுவ முனைவது என்ன? சாய்ந்தமருது இல்லாத தேர்தலில் ஏற்படப்போகும் தாக்கத்தை தற்போது தேர்தலூடாக எவ்வாறு நிறுவலாம். இது சாதாரண கணித்த்துடன் சம்பந்தப்பட்டது. அவர்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்புகிறார்கள்; என்பது புரியவில்லையா?
சிந்தியுங்கள். சாய்ந்தமருதுக்கு சபை கிடைத்தால் சில உள்ளூர் சேவைகளை இன்னும் சற்று சிறப்பாக செய்யலாம் ( அதுவும் நிர்வாகத்திற்கு வருகின்றவர்களைப் பொறுத்தது). இது சற்றுத்தாமதிப்பதால் இழப்புகள் ஏதும் ஏற்பட்டுவிடப்போவதில்லை. சிராஸ் மீராசாஹிப் பதவி பறிக்கப்படாமல் இருந்திருந்தால் இன்றுவரை கிடப்பில் இருந்திருக்கும்.  மறுபுறத்தில் கல்முனை மாநகரின் நிர்வாகத்தை முஸ்லிம்கள் சுயமாக நிறுவுவது தவறுமானால் முஸ்லிம்களின் வர்த்தக கேந்திரமான கல்முனையில் இழப்புகளை சந்திக்க வேண்டியேற்படும்; என்பதை உணர்கிறீர்களா? அந்த இழப்பை நீங்கள் ஆதரிக்கின்றீர்களா?
சமயோசிதமாக செய்ய வேண்டிய ஒரு போராட்டம் உணர்ச்சிப் போராட்டமாக மாறியதால் எங்கோ இருந்த ஆனந்தி சசிதரன் முதற்கொண்டு வட- கிழக்கு இனவாத சக்திகளெல்லாம் விழித்துக்கொண்டிருப்பதால் இலகுவாக காணவேண்டிய தீர்வு அதன் அடுத்த கட்டத்திற்கு நகர்த்த்ப்பட்டிருப்பதை  அறிவீர்களா? இன்று சம்பந்தன் விரும்பினால்கூட ஏனைய தமிழ்த்தரப்பைக் கருத்தில்கொள்ளாமல் தீர்வுக்கு உடன்பட முடியாத ஒரு இக்கட்டான நிலையை இப்போராட்டம் ஏற்படுத்தியிருப்பதை உணர்ந்திருக்கின்றீர்களா? நீங்கள்  சுயேச்சைக்கு அளிக்கப்போகின்ற வாக்கு உங்களை இன்னும் மோசமான போராட்ட களத்திற்குள்தான் தள்ளப்போகின்றது. எல்லோரும் ஏற்றுக்கொண்ட ஒன்றை எல்லா ஊர்களும் ஒன்றுபட்டு ஒற்றுமையாக சாதிப்பதற்குப் பதிலாக தனித்துநின்று போராடித்தான் பெறவேண்டுமா? சிந்தித்துப் பாருங்கள்.
தேர்தலின் பின்
——————-
நாளை சுயேச்சைக் குழு வெற்றிபெற்றால் அவர்கள் நேரடியாக ஜனாதிபதியிடம் அல்லது பிரதமரிடம் போய் தீர்வைப் பெறுவார்களா? அல்லது ஏதாவது ஒரு அரசியல் கட்சியின் தயவை நாடுவார்களா? இன்று அரசியல்கட்சிகளுக்கெதிராக ஊரின் ஒற்றுமை, தன்மானம் என்ற உணர்ச்சிக்கோசங்களை உதிர்த்துவிட்டு நாளை அரசியல் கட்சிகளின் தயவை நாடுவது ஊரின் தன்மானத்திற்கு இழுக்காகாதா?
சுயேச்சைக்கான வாக்கு தமிழ்த்தரப்பிற்கு வாய்ப்பு
——————————————————————
ஏற்கனவே காட்டிய கணக்குகளின் படி சாய்ந்தமருதைத் தவிர்த்தால் ஏனைய அனைத்து ஊர்களும் சேர்ந்தாலும் பெரும்பான்மை பெறமுடியாது. எனவே தமிழ்த்தரப்புடன் இணைந்தே தீரவேண்டும். அவ்வாறு இணைவதால் ஏற்படும் பாதிப்பை பல ஆக்கங்களினூடாக ஏற்கனவே தெளிவுபடுத்தியிருக்கின்றேன்.
நீங்கள் சுயேச்சைக்கு அளிக்கின்ற வாக்குகளுக்கு பின்வரும் இரண்டில் ஓர் அர்த்தம்தான் இருக்க முடியும். ஒன்று, இத்தேர்தலில் தமிழ்த்தரப்புடன் இணைந்து நிர்வாகத்தை அமையுங்கள். அதன் விளைவுகளை அனுபவியுங்கள். அவை எதைப்பற்றியும் எமக்குக் கவலையில்லை. எமக்கான சபையை எல்லோருடனும் சேர்ந்து ஒற்றுமையாகவும் அடைய முயற்சிக்கப்போவதில்லை. தனித்து நின்று போராடப்போகிறோம். இலக்கு சபையல்ல. மாறாக இலக்கு வேறு. அதை அடைவதற்கான வழி போராட்டம்; என்பதாகும்.
இரண்டாவது: இல்லை. தேவையான பெரும்பான்மையை சுயேச்சைக்குழுவுடன் இணைந்து பெற்றுக்கொள்ளலாம்; என்பது அர்த்தமானால் நீங்கள் வாக்களிக்கும்போதே ‘பைஅத்தை’ மீறுவதற்கு அனுமதியும் வழங்குகின்றீர்கள்; என்பது பொருளாகும். அதை நீங்கள் விரும்புகின்றீர்களா? உங்கள் உள்ளத்தில் இந்த எண்ணம் எதுவும் இல்லை; சுயேச்சைக்கு வாக்களிப்பதால் ஊருக்கு நல்லது நடக்கும்; என்ற உங்களது  அப்பாவித்தனமான நம்பிக்கையில்தான் வாக்களிக்கப் போகின்றீர்கள்; என்பது எனக்குத் தெரியும். ஆனாலும் நடைமுறையில் அவை மேற்சொன்ன பொருளைத்தான் கொடுக்கப்போகின்றன.
அன்பின் சாய்ந்தமருது உடன்பிறப்புகளே!
நீங்கள் சுயேச்சைக்கு அளிக்கப்போகும் ஒவ்வொரு வாக்கும் கல்முனையின் முஸ்லிம்களின் பொருளாதாரத்தில் அந்நியவர்கள் குறிவைக்க விரும்பியோ விரும்பாமலோ அது துணைபோகப்போகின்றது. இதை நீங்கள் விரும்புகின்றீர்களா? அதேநேரம் உங்கள் உள்ளூராட்சி இலக்கை மேலும் ரணகளமாக்கப் போகின்றது.
‘வாருங்கள்! ஒன்றுபட்டுத் தீர்வு காண்போம். உங்கள் இலக்கில் எங்களுக்கு எதுவித மாற்றுக்கருத்தும் இல்லை. எங்களை அந்நியவரிடம் காவுகொடுத்துப்பெற முயற்சிக்காதீர்கள்;’ என்று மட்டும்தானே கல்முனை மக்கள் கூறுகின்றார்கள். நம் இதயங்கள் நம் சகோதரத்துவத்திற்காக இரங்காதா? இதனை நல்லிதயம்கொண்ட சாய்ந்தமருது மக்கள் உள்வாங்கிவிடக் கூடாது; என்பதற்காகத்தானே இப்போராட்டம்
 செய்கின்றவர்கள் உணர்ச்சிக் கோசங்களை எழுப்புகின்றார்கள்.
சாய்ந்தமருதும் வாழவேண்டும்; கல்முனையும் வாழவேண்டும்; மற்ற ஊர்களும் வாழவேண்டும்; சகோதரர்களே! ஒரு ஊரின் வீழ்ச்சியில் இன்னொரு ஊர் வாழ நினைக்கலாமா? அவ்வாறு வாழ்ந்தாலும் பறவாயில்லை. அடுத்த ஊரையும் வீழ்த்தி தானும் வீழ்வதற்காக அல்லவா இப்போராட்டம் இடம்பெறுகின்றது.
இத்தேர்தலில் நீங்கள் எடுக்கப்போகும் முடிவு அடுத்த ஊரில் பாதிப்பை ஏற்படுத்திவிட்டால் அது ஒரு நிரந்தர வடுவாகிவிட மாட்டாதா? நம் இரு கண்களான இவ்விரண்டு ஊர்களுக்கும் இந்நிலை வரவேண்டுமா? சிந்தியுங்கள் சகோதரர்களே!
நான் நியாயங்களைச் சொல்லுகின்றபோது சிலர் அதற்கு சாயம்பூச முனைகிறார்கள். எனது தனிப்பட்ட அரசியல் கோணத்தில் யோசித்தால் கல்முனையில் பாராளுமன்ற உறுப்பினரைக்கொண்ட ஒரு கட்சியைப் பலப்படுத்துவதென்பது எனது தனிப்பட்ட அரசியலுக்கு எதிரானதல்லவா? ஏனெனில் நாளை இன்ஷாஅல்லாஹ் நான் பாராளுமன்றத் தேர்தலில் இறங்கினால் இன்னொரு கட்சியைப் பலப்படுத்துவது எனக்கு சாதகமாக அமையுமா?
உண்மையில் நான் சுயநல அரசியல் செய்வதாயின் இன்று குளம்பியிருக்கின்ற குட்டைக்குள் நான் மீன்பிடிக்க முயலவேண்டுமல்லவா? எரிகின்ற நெருப்பில் எண்ணை ஊற்ற வேண்டுமல்லவா? எனது பக்கம் மக்களை எவ்வாறு கவருவது என்பதற்குப் பதிலாக அடுத்த கட்சியின் பக்கம், அதுவும் கல்முனையில் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் உள்ள கட்சியின் பக்கம் மக்களைத்தள்ள முற்படுவேனா? அது எனக்கே எதிரானதல்லவா?
இன்று நான் கல்முனை தொடர்பாக எழுதுகின்ற எழுத்துக்கள் நடைமுறையில் எனது தனிப்பட்ட அரசியலுக்கு எதிரானது; என்று தெரிந்தும் ஏன் எழுதுகின்றேன். நான் அவ்வாறு சுயநல அரசியல் இன்றுவரை செய்யவில்லை; சகோதரர்களே! அதனால் நான் சந்தித்த இழப்புக்கள், அடைந்த வேதனைகள் கொஞ்ச நஞ்சமல்ல. ஆனாலும் எனது பாதையை மாற்றிக்கொள்ள நான் தயாரில்லை.
இன்று சாய்நதமருது நிலைமையைப்பற்றி எழுதுவதற்கு சாய்ந்தமருதில் பிறந்தவர்கள் தயங்குகிறார்கள், ‘ துரோகிப்பட்டம்’ சூட்டிவிடுவார்கள் என்று. சிலர் என்னிடம் தொலைபேசியில் நீங்கள் நியாயங்களை எழுதுங்கள்; என்று வேண்டுகிறார்கள். சாய்ந்தமருதுக்கு வெளியில் பிறந்தவர்கள் ‘ சாய்ந்தமருதின் விரோதி’ என்று பட்டம் சூட்டிவிடுவார்கள்; என அஞ்சி மௌனமாக இருக்கின்றார்கள். யாராவது ஒருவர் நியாயத்தைப் பேசத்தானே வேண்டும்.
இன்றுவரை தர்க்கரீதியாக யாரும் எனது கருத்துக்களை மறுதலிக்கவில்லை. மாறாக சிலர் சாயம்பூச முற்படுகிறார்கள். எனது எழுத்துக்கள் கல்முனையினதுமட்டுமல்ல, சாய்ந்தமருதினது நலனையும் முன்வைத்துத்தான் எழுதப்படுகின்றது;என்பதை இன்று புரியாதவர்கள் சற்றுத் தாமதித்தாவது புரிந்துகொள்வார்கள்.
எனவே, நமது தனிப்பட்ட நலன்களை, உணர்வுகளை ஒதுக்கி வைத்துவிட்டு நமது பொதுநலனுக்காக இத்தேர்தலில் ஓர் அணியின்கீழ் ஒன்றுபடுவோம். ஒருமித்து நம் இலக்குகளை அடைவோம். இன்ஷாஅல்லாஹ்.
எல்லாம் வல்ல நாயன் நம் உள்ளங்களுக்கு வெளிச்சத்தை தருவானாக. நமது பாவங்களை மன்னிப்பானாக.
-வை எல் எஸ் ஹமீட்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!