எது நடந்தாலும் மரைக்காயர் எவரும் எந்த கருத்தும் யாரிடமும் கூறாமல் வாயைப் பொத்திக்கொண்டிருக்க வேண்டுமென்பது அப்பட்டமான ஜனநாயக மீறலாகும்!

சா.மருது-மாளிகைக்காடு யாப்பு….

ஏன் மாற்றம் வேண்டும்? எதில்மாற்றம் வேண்டும்?

தொடர்-5…….
(யாப்பின் ஜனநாயக விழுமியங்கள்)

📌 மரைக்காயர் பதவி வறிதாதல் என்ற விடையத்தில், பி. 8(எ) இன்படி,

“நிர்வாகம் சம்மந்தமாக பொது மக்கள் மத்தியில் குறை கூறுதலின் மூலம், ஒரு மரைக்காயரின் பதவி வறிதாகும்.”

இது எந்தளவு ஒரு கருத்துவேறுபாடுள்ள மரைக்காயரின் கருத்து சுதந்திரத்தை மதிக்கிறது என சிந்தியுங்கள். ஒரு நிர்வாகத்தில் எது நடந்தாலும், அது சம்மந்தமாக ஒரு மரைக்காயர் எந்த கருத்தும் யாரிடமும் கூறாது, வாயைப்பொத்திக்கொண்டிருக்கவேண்டுமென்பது அப்பட்டமான ஜனநாயக மீறலாகும்.

📌 பி.12 இன்படி 15 பேர்கொண்ட மஹல்லாக்குழுக்கள் ஒவ்வொரு மஹல்லா பள்ளிக்கும் அமைக்கப்பட்டாலும், அதன் தலைவர் ஒரு மரைக்காயர்ஆகவே இருப்பார் (பி.12(2)இ) என்பதன்மூலம், அக்குழுக்களின் செயற்பாட்டு சுதந்திரம் மரைக்காயர் சபையாலேயே கட்டுப்படுத்த படுகிறது.

உண்மையிலேயே, ஒரு மஹல்லா பள்ளியின் குழு, அதன் தலைவர் அம்மஹல்லா வாசிகளால் தெரிவுசெய்யப்பட்டு, அது சுதந்திரமாக முடிவெடுக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட்டு, அதன் தலைவர் பிரதான ஊர் நிர்வாக சபையில் அங்கம் வகிக்க வேண்டும்.

ஆனால் இங்கு, மஹல்லா குழு என்ன முடிவு எடுத்தாலும், அது அதன் தலைவரான மரைக்காயர் ஒருவரின் ஒப்புதல் பெறப்பட்டே நடைமுறைப்படுத்தப்படலாம்.

மேலும், மஹல்லா அபிவிருத்திக்குழு பெரியபள்ளி செயலாளருக்கு அறிவிக்கப்பட்டே கூட்டப்படவேண்டும் என்பதோடு, அம்மஹல்லாவிலுள்ள சகல மரைக்காயர்களும் அதற்கு அழைக்கப்படவேண்டும், அபிவிருத்திக்குழுவின் எந்த செயற்திட்டமும் மரைக்காயர்சபையின் முன் அனுமதியின்றி நடைமுறைப்படுத்த முடியாது ( பி. 12(3)(ஏ, ஐ)). ஆக, மஹல்லா குழு என்பதே, மரைக்காயர் சபையின் இறுக்குப்பிடிக்குள்ளேயேஇயங்கவேண்டும் என்னும் இக்கொள்கை ஜனநாயகமானதா?

📌 பி 13.1 இன்படி, 15 உபகுழுக்களும் (தொடர்-3ஐ பார்க்கவும்), அவர்களின் குழுசார்ந்த எந்த ஒரு செயற்திட்டத்தை அமுல்படுத்துவதாயிருந்தாலும், மரைக்காயர் சபையின் அநுமதியின்றி முடியாது. இங்கு குறிப்பிட்ட விடையத்தில் துறைசார்ந்தோர் கூட, மரைக்காயர் சபையால் அதை நிறைவேற்றுவதிலிருந்து கட்டுப்படுத்தப்படுகின்றனர்.

📌 இந்த குடி மரைக்காயர்கள் அனைவரும் கூட்டங்களுக்கு அழைக்கப்படுகிறார்களா?அனைவருக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பப்படுகின்றனவா? சகலரினதும் ஒப்புதல்களோடுதானா தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன? என்று பார்த்தால், அது கேள்வியாக தொக்கி நிற்கிறது.

📌 பிரிவு 4(அ) இன்படி, ஆலோசனை சபை (Advisory Board) ஒன்று அமைக்கப்பட்டு, அதில் 5பேருக்கு குறையாத முன்னைநாள் தலைவர்களும், சபை தீர்மானிக்கும் உறுப்பினர்களும் அடங்குவர்.

முஸ்லிம்களின், பிரதேசத்தின் பொதுவான, விசேட நிகழ்ச்சி தொடர்பான விடையம் குறித்து இவ்வாலோசனை சபையின் கருத்தை, தேவையாயின் பெறலாம்/அவர்களுக்கு ஆற்றுப்படுத்தலாம் என்கிறது. ஆனால் இதுவரை நடந்த விசேட,பொதுவான நிகழ்ச்சிகள் ஏதாவது ஒன்று முன்னைய தலைவர்களுக்கும் ஆற்றுப்படுத்த பட்டனவா?? இவ்வாறான ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறதா? இவை ஜனநாயக விரோதமில்லையா?

📌 பி 7.1 இன்படி குடி மரைக்காயருக்கான ஒரு வெற்றிடம் உருவாகும்போது, எந்த ஜனநாயக முறையுமல்லாது, அக்குடியிலுள்ள மரைக்காயர் மட்டும் சேர்ந்து அவர்களுக்கு தெரிந்த ஒருவரை நியமிக்கின்றனர்.

📌 நாட்டின் ஜனாதிபதிக்கே, பதவியில் இரண்டு தடவைக்கு மேல் இருக்க முடியாதென அரசியல்சட்டம் இருக்கும்போது, இவ்யாப்பில் ஒருவர் எத்தனை தடவை தலைவராக இருக்கலாமென்ற எந்த அறிவுறுத்தலும் இல்லை (பி. 10).

இவை மாற்றப்பட வேண்டாமா??

தொடரும்….

பி.கு: இது எந்த கௌரவ உறுப்பினரையும், அரசியல் கட்சிகளையும் தனிப்பட்ட ரீதியில் விமர்சிக்கும் பதிவல்ல. மாறாக யாப்பில் உள்ள சில குறைபாடுகளை சுட்டிக்காட்டி, அவற்றிலுள்ள சாதக,பாதகங்களை ஆராய்ந்து, அவற்றைத்திருத்தி ஒரு சிறந்த யாப்பையும், சபையையும் உருவாக்குவதே இதன் நோக்கம்.

ஏ. ஜலீல்
இலங்கை சுங்க அதிகாரி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!