இரட்டைச்சாய முள்வேலி முகாம் கொரோனா கொவிட்-19

சுஐப் எம்.காசிம்

“குந்தியிருக்க நேரமின்றி

குடியிருக்கா மானிடனை

குடும்பத்தோடு கூடியிருக்க

கட்டளையிட்ட காவல்காரன்.

பிறப்பிலேயே நீ பேரிடி

இறப்பிலோ பெருந்தலையிடி

மனிதனை மட்டுமா? மதங்களையும்

கொல்லும் பெரும் ரவுடியும் நீயே.

உனது வருகையால் ஆஸ்திகனும்

நாஸ்திகனும் தெருக்கூத்தாடிகளாகி,

லௌகீகமும் ஆத்மீகமும் உன்னையே

வளைக்கும் முள்வேலிகளாகின்றன.”

இந்த வரிகளோடுதான் கொரோனாவின் இன்றைய கொடூரங்களைக் களத்தில் கொண்டுவர முடிகிறது. நான்கு மாதங்களாக உலகின் பேசுபொருளாகியுள்ள கொவிட் 19 ஆத்மீகவாதிகள், லௌகீகவாதிகள், அரசியல்வாதிகள், ஊடகவாதிகள், அப்பாவிகள் உள்ளிட்ட அனைவரையும் உதறியெடுக்கின்றது. இந்த உதறலில் பறப்பவை பதர்களாகவும், கிடப்பவை கனதிகளாகவும் கருதப்படுகின்றன. “அர்த்த ராத்திரியில் குடைபிடிக்கும் அற்பனைப்போல்” சிலரின் பேச்சுக்கள், எழுத்துக்கள், பதிவூட்டங்கள் அமைந்துள்ளமை, அவர்களது மன விகாரங்களையும் இயலாமைகளையும் எடுத்துக்காட்டுவது, இவர்கள்மீதான சமூக அங்கீகாரங்களுக்கான சுய அளவீடுகளாக அமைவதைப் பலர் புரிந்தபாடில்லை. ஏதிலிகள் கூட்டத்தை அடையாளம் காண்பதற்கு ஆண்டவனளித்த அன்பளிப்புகளாகவும் அளவீடுகளாகவுமே, இந்த சமூக வலைத்தளங்கள் உள்ளதென்பதே எனது கருத்து.

ஊதிப்பெருப்பித்தும் உண்மையை மறைத்தும் ஒன்றுமாகப்போவதில்லை. ஒரு செயற்பாட்டுக்கு (வினைக்கு) ஆத்மீகக் காரணமும் லௌகீகப் பின்னணியும் சொல்ல விழையும் கூட்டத்தார் மத்தியில், யதார்த்தமாக எந்தத் தீர்மானத்தையும் எடுக்க முடியாதே! ‘வணக்கஸ்தலங்களுக்குச் செல்வது, அங்கு கூடிநிற்பது கொரோனா வைரஸைப் பரவச் செய்யுமென்று’ ஒரு சாரார் கூற, ‘ஆண்டவன் நியதியில்தான் அனைத்தும் நடக்குமென’ மறுசாரார் கூறிக் கொண்டு வணங்கச் செல்கின்றனர். “ஆண்டவன் அனுப்பிய நோயை ஆத்மீகத்தால் அழித்தொழிப்போம்” என்போர், லௌகீகவாதிகளின் ஆலோசனைக்கு அடிபணிவதாயில்லையே! மறுபுறம் ‘மதங்கள், சடங்குகள், நம்பிக்கைகள் எல்லாம் மனிதன் ஏற்படுத்திய வரையறைகள். இவற்றை தூக்கியெறிந்துவிட்டு விஞ்ஞானத்தின் வளர்ச்சியில், வெகுமதியில் கொரோனாவை ஒழிப்போம்” என்கின்றனர் நாஸ்திகர்கள். ‘சீனாவால் விசிறப்பட்ட ஒரு கொரோனாவுக்கு முகங்கொடுக்க முடியாத வணக்கஸ்தலங்கள், நம்பிக்கைகளை இன்னுமா நம்புவது? நிரந்தரமாகவே மூடிவிடுங்கள் இவற்றை’ என்பவரும் உள்ளனர்.

இவ்விரட்டைச்சாய முள்வேலிகள்தான் “கொரோனாவை” பந்தாட வைத்து, உலகைத் திண்டாட வைத்துள்ளது. இதற்குள் அரசியல்வாதிகளும் மாட்டிக்கொண்டது சிலருக்கு கொண்டாட்டம்தான். இந்தக் கொண்டாடிகளின் கண்கள் அவஸ்தை, பசி, வறுமை, துன்பங்களால் கண்ணீர் சிந்தும் எமது உடன்பிறப்புக்களைக் கண்டபாடில்லை. கண்டிருந்தால் உணர்ந்திருப்பர். உணர்ந்திருந்தால் மனம் திறந்திருப்பர். திறந்திருந்தால் நாகரீக மொழிநடை, நியாயமான சிந்தனை, நீதமான பார்வை, நிஜமான செய்திகள், பதிவூட்டங்கள் ,கருத்தாடல்களைக் கண்டிருக்கலாம். அதற்காக எல்லோரும் ஏதிலிகள் என்பதும் இல்லை. ஓரஞ்சாராத, மதஞ்சாராத, பக்கம்சாராத, இனஞ்சாராத, குரோதஞ்சாராத எழுத்துக்கள், பதிவூட்டங்கள், பேச்சுக்கள், அறிவுரைகளைக் காண்கையில், ‘கடல்கொண்ட வெள்ளம்போல்’ மனம் அகல விரிகின்றது.

அகன்று விரிந்துள்ள இந்த உலகில் கொரோனா ஆட்கொள்ளாத ஆட்களில்லை, அரசுகளில்லை. கடைசியில் வேதமோதுவோரின் வியாக்கியானங்களும் விதண்டாவாதிகளின் குதர்க்கங்களுமே, மனிதனை மயக்க நிலைக்குள் மிதக்க வைக்கிறது. இந்நிலைமைகள் சந்தர்ப்பவாதிகளாலன்றி, சமயோசிதர்களாலே தெளிவூட்டப்பட வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!