சாதிக்க தயாராகும் மு.கா.

(தனிஒருவன்)

உள்ளுராட்சி தேர்தல் சூடுபிடிக்கும் தருணத்தில் ஒரு சாணக்கியமா? தில்லுமுல்லா? இருந்தாலும் நடந்ததை நல்லதாக எடுத்துக்கொள்ளத்தான் வேண்டும். கிழக்கின் அரசியல் நிலை சடுதியில் தடம்புரண்ட வண்ணம் உள்ளது அனைத்துக் கட்சிகளுக்கும்.

இந்நிலையில் கடந்த சில காலங்களில் மு.கா. வீழ்ச்சியை நோக்குவது போல் பலராலும் ஊகிக்கப்பட்டிருந்தது.
இதே நேரம் அ.இ.ம.க கிழக்கில் அதிலும் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் மயில் தோகையை முழுமையாக விரித்தடாவே ஓர் வீராப்பில் பயணித்துக் கொண்டிருந்தது. மு.கா.வின் அதிருப்தியில் மக்கள் அலையென திரள்கின்றனர் அ.இ.ம.கவின் பக்கம் சம்மாந்துறை மக்கள் ஒரு விதமாகவும், ஒலுவில் பாலமுனை மக்கள் ஒரு விதமாகவும், சாய்ந்தமருது மக்கள் உள்ள+ராட்சி என்றும், அட்டாளைச்சேனை மக்கள் எம்.பி. என்றும்.

ஆனால், பேசுகின்றவர்கள் பேச, எதிர்க்கின்றவர்கள் எதிர்க்க மு.கா.வின் பணயம் எந்த தளம்பலும் இல்லாமைபோல்தான் உள்ளது. ஏனெனில் ஆக்ரோக்ஷமாக கோஷம் எழுப்பியவர்களிடமும் ஆரவாரப்பட்டு கொந்தளிப்பவர்களிடமும் அமைதியான அடியாக கொடுக்கிறது மு.கா. தலைமையின் சில செயற்பாடுகள்.
அண்மையில் அட்டாளைச்சேனைக்கு மு.கா. தலைவரினால் வழங்கப்பட்ட எம்.பி. அந்த ஊரில் பாரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வழிவகை செய்துள்ளது. 3 தசாப்தங்களாக எம்.பி.த்தாகத்தை கொண்டிருந்த மக்களுக்கு இந்த சந்தர்ப்பத்தில் எம்.பி. எனும் நீரைப் புகட்டி தாகம் தீர்த்தமை மு.கா வுக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்றே கூறவேண்டும்.

அது போல எதிர்வரும் சில நாட்களில் பிரதமர் உட்பட மு.கா. தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களும் சாய்ந்தமருதில் இடம்பெறவுள்ள பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளனர். அதன் பின்னர் சாய்ந்தமருதின் திருப்புமுனையும் மு.கா. வுக்கு சாத்தியமாக வாய்ப்புள்ளது.

இதே போன்று சம்மாந்தறையை எடுத்துப் பார்த்தால் அண்மைய பொதுக்கூட்டமொன்றில் முன்னாள் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாடினால் பேசப்பட்ட “முஸ்லிம்கள் இங்கு வந்து குடியேறிவர்கள்” எனும் கூற்று சம்மாந்துறை மக்களின் மனங்களிடையே பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்படி ஒவ்வொரு ஊர்களின் அரசியல் நிலைமைகளை அலசும் போது, அ.இ.ம.க சென்ற வேகத்தில் தளர்வு ஏற்பட்டு மு.கா.வின் வெற்றி உறுதியாவது போல் தென்படுகின்றது. இந்த நிலையில் சமீப காலமாக சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்களும் அமைப்பாளர்களும் சிறப்பாக செயற்பட்டு வருகின்றமையும் இவ்விரு கட்சிகளின் வாக்குகளை சிதற வைக்கும் ஒரு உத்தியாக இருக்கின்றது.
அத்தோடு மருதமுனை, நற்பிட்டிமுனை மக்களும் இறுதியில் எவ்வாறான திருப்புமுனையை உள்வாங்குவர் என்பது ஒரு ஐயப்படாகவே உள்ள நிலையில், மு.கா. தலைமையின் ஆழ்ந்த சிந்தனையையொட்டிய தூரநோக்கான செயற்பாடுகளை உற்றுநோக்குகையில் அ.இ.ம.க. ஏறிச் செல்லும் வரைபில் வீழ்ச்சி ஏற்படுவது போலதான் தெரிகின்றது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!