பிரதான கட்சிகளுக்கு பலப்பரீட்சையாக அமையவுள்ள உள்ளூராட்சித் தேர்தல்

(ஆதில் அலி சப்ரி)

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான கெடுபிடிகள் நடைபெற்றுவரும் வேளையில், தேர்தலுக்கான தினம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பொது மக்களிடையே புது உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி என அரசியல் கட்சிகள் சில எதிர்வுகூறியிருந்தன. தேர்தல் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவேண்டியதை அரசியல் கட்சிகள் அறிவித்ததால் தேர்தல் ஆணையாளர் சீற்றமடைந்திருந்தார். தேர்தல் ஆணைக்குழுவின் பணியை ஏனையோர் கையிலெடுக்கும் நிலையேற்பட்டால், எவ்வித கஷ்டமேற்பட்டாலும் தேர்தலை வார நாளொன்றில் நடத்தி முடிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

தேர்தல் ஆணைக்குழு வார நாட்களான பெப்ரவரி 8, 12 மற்றும் வார இறுதி 10, 17 ஆகிய தினங்கள் குறித்து ஆராய்ந்து, இடையே வரும் நாட்டின் 70 ஆவது சுதந்திர தினத்தையும் கருத்திற்கொண்டு பெப்ரவரி 10ஆம் திகதியில் முழு நாட்டுக்குமான தேர்தலாக அறிவித்தது. இம்முறை 24 மாநகர சபைகள், 41 நகர சபைகள், 276 பிரதேச சபைகள் என 341 சபைகளுக்கும் மொத்தமாக தேர்தல் நடைபெறவுள்ளது.

தேர்தல் குறித்த பொதுமக்கள் அறிவூட்டல்களை

தேர்தல் ஆணைக்குழு பல மாதங்களுக்கு முன்னதாக ஆரம்பித்திருந்தது. புதிய தேர்தல் முறை, சட்ட வரையறைகள், வேட்புமனு, தடைகள் போன்றன குறித்து பல தடவைகள் ஊடங்கள் மூலம் அறிவுறுத்தியிருந்தும் தேர்தல் காலத்தில் நடைபெறும் சீர்கேடுகள், சட்ட விரோத செயற்பாடுகள் குறைந்ததாக தெரியவில்லை. இதனடிப்படையில்

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்,

தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தேர்தல் நடைபெறும் தினத்தை உத்தியோகபூர்வமாக அறிவித்து, ஊடகவியலாளர்களிடம் கைலாகு செய்து- வலியுறுத்திய விடயங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.

 

வேட்புமனு

இம்முறை உள்ளூராட்சி மன்றங்களுக்கு இரண்டு கட்டங்களாக வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. முதல் கட்டமாக கடந்த 11ஆம் திகதி காலை 8.30மணி முதல் 14ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை 93 சபைகளுக்கான

வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இரண்டாம் கட்டமாக 248 சபைகளுக்கான

வேட்புமனுக்கள் 18ஆம் திகதியில் இருந்து 21ஆம் திகதி நண்பகல் 12மணி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.

93 சபைகளுக்கான வேட்புமனு ஏற்பில் 30 அரசியல் கட்சிகள், 49 சுயேட்சைக் குழுக்களின் 497 வேட்புமனுக்கள் கிடைத்துள்ளதோடு, 23 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டிருந்தன.

 

வேட்புமனு நிராகரிப்பு

முதலாம் கட்ட வேட்புமனு தாக்கலில் அதிகளவான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து

தேர்தல் ஆணைக்குழு பக்கச் சார்பாக வேட்புமனுக்களை நிராகரிக்கின்றது என்ற குற்றச்சாட்டை சில அரசியல் கட்சிகள் முன்வைத்திருந்தன. இதனை முற்றுமுழுதாக நிராகரித்த தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, இவ்விடயம் குறித்து நீதிமன்றம் செல்வோரின் உரிமையை தாம் எவ்விதத்திலும் உதாசீனம் செய்வதில்லை என்று தெரிவித்தார். தாம் ஒவ்வொரு

வேட்புமனுவையும் சட்டம், ஒழுங்கின் அடிப்படையிலேயே நிராகரித்திருப்பதாகவும், அது குறித்து நீதிமன்றத்துக்கு விளக்கமளிக்கவும் தயாராகவே

உள்ளோம்.

வேட்புமனு நிராகரிக்கப்படுவதன் பாரதூரம் குறித்து தெளிவுபடுத்திய மஹிந்த தேஷப்பிரிய, அவருக்கு 1991ஆம் ஆண்டு மாத்தறையில் நிகழ்ந்த சம்பவமொன்றையும் நினைவுபடுத்தினார். ‘நான் கடமையில் ஈடுபட்டிருக்கும்போது, அபேட்சகர் ஒருவரின்

வேட்புமனு உரிய காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டது. அதை அறிந்த அபேட்சகர் மயங்கி வீழ்ந்தார். அவர் ஓர் இருதய நோயாளியும்கூட. நான் அன்றே நினைத்துக்கொண்டேன்.

வேட்புமனு நிராகரிக்கப்படும் வீதத்தை குறைக்க நடவடிக்கையெடுக்க வேண்டுமென்று. அதேபோன்று, வேட்புமனு நிராகரிக்கப்படும் சந்தர்ப்பங்களை பல தடவைகளும் தெளிவூட்டினோம். எனினும் கவனமின்றியே உள்ளனர்.’ என்றார்.

வேட்புமனு பத்திரமொன்று 8 சந்தர்ப்பங்களின்போது நிராகரிக்கப்படுகின்றன. அவை, உரிய காலத்திற்குள் கையளிக்கப்படமையும், சட்டத்தால் விதிக்கப்பட்ட ஒருவரினால் சமர்ப்பிக்கப்படாமையும், பெயர் குறிக்கப்படவேண்டிய வேட்பாளர்களின் எண்ணிக்கை உள்ளடக்கப்படாமை, பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை உள்ளடக்கப்படாமை, கட்சியின் தலைவர் அல்லது சுயேட்சைக் குழுவின் தலைவர் கையொப்பமிடாமை, கையொப்பங்கள் சமாதான நீதவானொருவரால் அத்தாட்சிப்படுத்தாமை, விதிக்கப்பட்ட கட்டுப்பணம் செலுத்தாமை, நியமனப்பத்திரத்தில் வேட்பாளரின் விருப்பத்தை தெரிவித்து கையொப்பமிடாமை, அரசியலமைப்பின் ஏழாம் அட்டவணையின் படிவத்திற்கமைய தயாரிக்கப்பட்ட சத்தியக் கடதாசியை இணைக்கத் தவறியமை போன்ற காரணங்களுக்காகவே வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படுகின்றன.

வேட்புமனுக்களை சுய விருப்பத்தின் அடிப்படையிலோ, கட்சி பக்கச் சார்பிலோ நிராகரிக்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டிய மஹிந்த

தேசப்பிரிய, மேலும் சில சுவாரஷ்யமான காரணங்களையும் குறிப்பிட்டார். வேட்புமனு ஏற்கும் நேரம் மாலை 4.30க்கு முடிவடையவுள்ளதோடு, 4.11க்கு சுபநேரத்தைக் குறித்துக்கொண்டு வருவர். பூர்த்திசெய்யப்பட

வேண்டியவைகள் சரிபார்க்கக் கூறியதும் சரியென்பர். இறுதியில் குறைகளால் நிராகரிக்கப்படும். வீட்டிலிருந்து நேர காலத்துடன் வருவதற்கும் சுப நேரமொன்று வைத்துக்கொள்ள வேண்டுகிறேன்.

 

சுவரொட்டி, பதாதைகளுக்கு தடை

சுவரொட்டிகள், பதாதைகள், விளம்பரங்கள் ஒட்டுவது காட்சிப்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. இது விடயத்தில் வரம்பு மீறுவோரை கைது செய்யும்படி பொலிஸாருக்கு தேர்தல் ஆணைக்குழு ஆலோசனை வழங்கியுள்ளது. இதன் முழுப் பொறுப்பும் பொலிஸாரையே சாரும். இவ்விடயத்தில் பொலிஸார் கடுமையாக இருக்கின்றனர்.

சட்டவிரோத சுவரொட்டிகளுக்கு மேலால் ‘இது சட்டவிரோதமானது’ என்று லேபல் ஒட்டப்படவுள்ளதாகவும் தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார். தேர்தல் செயலகம் சுவரொட்டிகளை அகற்றும் பணிகளை ஆரம்பித்துள்ளது. சிலர் சுவரொட்டிகளை ஒட்டும்போது கண்ணாடி துகல்களை கலந்து ஒட்டியுள்ளதாகவும். அகற்றும் பணியாளர்களின் கைகள் வெட்டிப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. சுவரொட்டிகளை குறைந்த செலவில், பொதுமக்கள் பண வீண் விரயமின்றி மேற்கொள்ள நடவடிக்கையெடுப்பதாக தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார்.

 

பொருட்கள் பங்கிட தடை

தேர்தல் காலங்களில் பாதைகள் செப்பனிடப்படுவதையும், பாலங்கள் நிர்மாணிக்கப்படுவதையும், கதிரைகள் பகிரப்படுவதையும் காணலாம். அதற்காக ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்டிருந்தாலும், அவை தேர்தல் காலங்களிலேயே மேற்கொள்ளப்படுகின்றன. இவை பொதுமக்களின் வரிப் பணத்திலேயே மேற்கொள்ளப்படுகின்றன. எனினும் பொதுமக்கள் இவ்விடயத்தில் தெளிவின்றியே இருக்கின்றனர். பொதுமக்கள் வரிப் பணத்தை அரசியலுக்காக பயன்படுத்தி வாக்குகள் கொள்ளையடிக்கப்படுகின்றன.

இவ்விடயத்தில்

தேர்தல் ஆணைக்குழுவின் வழிகாட்டலை நோக்கு

வோம். பொதுமக்கள் பணம் பொதுமக்களை

சேவைகளாக சென்றடைவதை

தேர்தல் ஆணைக்குழு வரவேற்கின்றது. எனினும் குறித்ததோர் அரசியல் கட்சியின் பெயரில் தேர்தல் காலங்களில் சென்றடைவதையே சட்ட முரணாக கருதுகின்றது. தேர்தல் காலங்களில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி பணிகள், அன்பளிப்புகளுக்கு ‘இது பொது மக்களிடம் அரவிடப்பட்ட வரிப் பணத்தால் வழங்கப்பட்டது. இதற்காக எந்தவோர் அரசியல் கட்சியையும் ஆதரிக்கத் தேவையில்லை’ எசுற வாசகத்தை பொறிக்க முடிவுசெய்துள்ளதாக

தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார்.

இலங்கையின் ஆரம்ப தேர்தல் காலங்களில்

சிவப்பு அணியினர் நெக்டோவும், பச்சை அணியினர் லங்கா லைம் எனும் தேசிக்காய் பாணத்தையும் வழங்கியதாகவும், நீல நிறத்தினருக்கு வழங்க எந்தவோர் பாணமும் இருக்கவில்லையென்று தேர்தல் ஆணையாளர் சுவாரஷ்யமாக குறிப்பிட்டார்.

ஜனவரியில் பாடசாலை புதிய கல்வியாண்டு ஆரம்பமாகவுள்ளது. பாடசாலை புத்தகங்கள், புத்தக பை, பாதணிகள் என்று கொடுப்பவர்கள் தர்மமே செய்கிறார்கள். எனினும் அவற்றில் பொறிக்கப்பட்டுள்ள கட்சி, சுயேட்சைக் குழுவின் பெயர்கள் தேர்தல் விதி முறைகளை மீறுவதாகவே உள்ளது. இவ்விடயத்திலும் வேட்பாளர்கள் கவனமெடுக்க வேண்டும்.

 

வெறுப்புப் பேச்சுக்கு தடை

இன, மத, மொழி மக்களின் உரிமைகளை மீறும் வெறுப்புப் பேச்சுக்களை தேர்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவது, தேர்தல் பிரசார மேடைகளில் பேசுவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. இன, மத பேதங்கள் ஏற்படும் விதத்தில் தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுப்பவர்களுக்கெதிராக கடுமையான சட்ட நடவடிக்கையெடுக்கப்படவுள்ளதாக தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார். அதேபோன்று, இனவாத, மத வெறுப்பு பேச்சுக்களை மேற்கொள்வோரை பகிரங்கப்படுத்த இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அரச வைபவங்களில் அரசியல் பேசுவது, அரசியல் அல்லது தேர்தல் அபேட்சகர்களை தொடர்புபடுத்துவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறான போது அரச பணியாளர்கள் சட்ட நடவடிக்கைக்கு உட்படுவர்.

 

பெண் அபேட்சகர்கள்

இம்முறை தேர்தலில் பெண் பிரதிநிதித்துவம் 25 சதவீதமாக இருக்க வேண்டுமென்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. போதிய பெண் அபேட்சகர்கள் இல்லாத வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. கட்சிகள் இத்தேர்தலில் பெண்களுக்கு முக்கிய இடத்தை வழங்கியுள்ளன. கணிசமான முஸ்லிம் பெண்களும் தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார்கள். தேர்தலில் போட்டியிடும் பெண்களுக்கெதிரான செயற்பாடுகள், வன்முறைகள், அவதூருகளில் இருந்து தவிர்ந்துகொள்ளுமாரும், இவ்விடயத்தில் விசேட கவனமெடுத்து நடவடிக்கையெடுக்கவுள்ளதாகவும் தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி இணைந்து நடத்தும் கூட்டரசாங்கத்தில் தேர்தலொன்று குறுக்கிட்டுள்ளது. கூட்டரசாங்கத்தின் 2020 நிலவுகை குறித்த தளம்பல் ஏற்பட்டுள்ளபோதே உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலை நடத்தவும் தேர்தலை ஒத்திப்போடவும் சில அரசியல் கட்சிகள் முயற்சித்ததும் இதன் காரணமாகவே.

இந்த தேர்தலில் 62 மக்களின் வாக்குகளை பெற்று ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேனவுக்கான மக்கள் ஆதரவு தொடர்கின்றதா? நாட்டில் ஆட்சி மாற்றமொன்றை ஏற்படுத்தி, அரசாங்கத்தின் பலமான கட்சியாக இருக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் நிலை எவ்வாறுள்ளது? 2015 ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்தாலும் பெரும்பான்மை மக்களிடத்தே நாட்டை ஒன்றுபடுத்திய துட்டகைமுனுவாக பார்க்கப்படும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொது எதிரணியின் பலம், இரு பெரும் கட்சிகளில் அதிருப்தியடைந்த மக்கள், கணிசமான முஸ்லிம்கள் ஆதரிக்க ஆரம்பித்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் எழுச்சி, முஸ்லிம் கூட்டமைப்பின் தாக்கம், முஸ்லிம் காங்கிரஸிற்கான சவால், விழுமிய அரசியலில் பயணிக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி போன்றவற்றின் பலம், பலவீனம் போன்றவற்றை இத்தேர்தல் புடம்போட்டுக் காட்டும்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!