அரசியலமைப்பு விடயத்திலும்  தவறுகள் தொடருமா?

மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டம் வாத விவாதங்களை கடந்து 2/3 பெரும்பான்மை பலத்துடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டமூலம் 111 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இச்சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிப்பார்கள் என்ற எதிர்பார்க்கப்பட்ட சிறுபான்மை அரசியல் கட்சிகளும் ஆதரித்தே வாக்களித்திருந்தன.

மாகாண சபைத் தேர்தல்களைப் பிற்போடுவதற்காக அரசாங்கம் புதிது புதிதாக திருத்தங்களைக் கொண்டுவந்து, காலத்தை இழுத்தடிப்பதற்கு முயற்சிப்பதாகவும், திருத்தச் சட்டமூலத்தை விவாதத்துக்கு எடுத்துகொள்ள தாம் அனுமதிக்கப்போவதில்லை என்ற கூட்ட எதிரணி பாராளுமன்ற உறுப்பினர்களின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில், திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகள் தேவையென சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய அறிவுறுத்தியதைத் தொடர்ந்து வாக்களிப்பு நடத்தி நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கையின் மாகாண சபைகளில் பெண்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதும், விகிதாசார தேர்தல் முறைக்கு பதிலாக தொகுதி மற்றும் விகிதாசார பிரதிநிதித்துவம் கொண்ட கலப்பு முறையிலான தேர்தல் முறையுமே இச்சட்டமூலம்.
தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய சிறுபான்மை கட்சிகள் இறுதி நேரத்தில் அரசாங்கத்துக்கு வழங்கிய ஆதரவு காரணமாகவே இத் திருத்தத்தை நிறைவேற்றத் தேவையான 2/3 பெரும்பான்மை பலம் கிடைத்துள்ளது.

மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்ட வரைவில் ஏற்கனவே காணப்பட்ட சில விடயங்கள் சிறுபான்மை இனங்களுக்குப் பாதிப்பாக இருந்ததாகவும், அவை திருத்தப்பட்டே சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்திருந்தார்.

உண்மையில், பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டம் முஸ்லிம்களையும் மலையக தமிழர்களையும் வெகுவாகப் பாதிக்கக்கூடியதாகும். இவ்விடயம் குறித்து முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியன கவனம் செலுத்த தவறியுள்ளன. சட்டமூலமும் பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றப்பட்டுவிட்டன. முஸ்லிம் அரசியல்வாதிகளின் வங்குரோத்து நிலை மீண்டுமொருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

புதிய அரசமைப்பொன்றுக்கான யோசனைகளை முன்வைப்பதன் நிமித்தம் நியமிக்கப்பட்டிருந்த வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை, அரசியலமைப்பு நிர்ணய சபைக்கு நேற்று சமர்ப்பிக்கப்பட்டது. வழிநடத்தல் குழுவின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே அறிக்கையை சபைக்கு சமர்ப்பித்தார்.

இதேநேரம், அரசாங்கம் புதிய அரசியலமைப்பினூடாக முன்வைக்கும் தீர்வு நிறைவானதாக இல்லையெனில், அதனைப் புறக்கணிக்கவிருப்பதாகவும், அரசியலமைப்புக்கான சர்வஜன வாக்கெடுப்பில் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக, அரசியலமைப்பின் தரத்தைக் குறைப்பதற்கு இடமளிக்கப்போவதில்லையெனவும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் சமூகமும் சமூகத்தை பிரதிநிதித்துப்படுத்தும் அரசியல்வாதிகளும் புதிய அரசியலமைப்பு விடயத்திலும் பொடுபோக்கான நிலையிலே உள்ளனர். இந்நிலை தொடர்ந்தால் மாகாண சபை விடயத்தில் பிரதிநிதித்துவத்தை இழக்கும் நிலையேற்பட்டுள்ளது போன்று, அரசியலமைப்பு விடயத்திலும் சமூகத்திற்கான பாதிப்புகளுடன் கூடிய அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டுவிடும்.

முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியலமைப்பு விடயத்தில் கூடிய கவனம் செலுத்தவேண்டும். புதிய அரசியலமைப்பே இனப் பிரச்சினைக்கான தீர்வாகும். இணக்கப்பாட்டு ஆட்சி நடைபெறும் காலத்தில் சமூகத்தின் தேவைகளை அரசியலமைப்பினூடாக வென்றெடுக்க தவறும்பட்சத்தில், சமூகத்தின் இருப்பே கேள்விக்குறியாகும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். முஸ்லிம் பிரதிநிதிகள் இவ்விடயத்தில் பொறுப்புடன் செயற்படுவார்களா?

(நன்றி – நவமணி)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!