முஸ்லிம்கள் முஸ்லிம்களாக இருக்க வேண்டும்

(ஆதில் அலி சப்ரி)
எனது மேசையில் எப்போதும் அல்குர்ஆனொன்று இருக்கும். நான் ஒவ்வொருநாளும் அதனை வாசிப்பேன். அல்குர்ஆனில் இருந்து மூன்று வசனங்களை தெரிவுசெய்து எமது பாடசாலையிலும் காட்சிப்படுத்தியுள்
ளேன். முஸ்லிம்களை நடுநிலையான சமூகமாக ஆக்கியுள்ளதாக அல்லாஹ் கூறுகின்றான். இலங்கை முஸ்லிம்களும் நடுநிலை சிந்தனையுடன் செயற்படவேண்டும் என்று தாய்லாந்தின் பட்டானி பல்கலைக்கழக பௌத்த பேராசிரியர் கலாநிதி கனோக் வொங்ட்ரன்கோன் தெரிவித்தார்.
ஜாமிஆ நளீமியா இஸ்லாமிய கலாபீடமும் மற்றும் நொலேஜ் பொக்ஸ் ஊடக நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இலங்கை- தாய்லாந்து சூழலில் இஸ்லாம் மற்றும் பௌத்தத்திற்கிடையிலான சகவாழ்வு என்ற விரிவுரையில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கலாநிதி கனோக் வொங்ட்ரன்கோனின் உரையின் தொகுப்பை இங்கே தருகின்
றோம்.
நான் உங்கள் முன் உரையாற்ற கிடைத்த சந்தர்ப்பத்தை மகிழ்ச்சியானதாக கருதுகின்றேன். இங்கு வருகைதந்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இஸ்லாம்- பௌத்தத்திற்கிடையிலான சகவாழ்வு பற்றிய எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். நான் ஒரு பௌத்தனாக இருந்த போதும் இஸ்லாத்தின் மீது உறுதியான ஆர்வம் கொண்டவன். நான் ஒரு உலமாவோ, இஸ்லாமிய அறிஞனோ அல்ல என்பதை மனதில் கொள்க. வெறுமனே, இஸ்லாத்தைக் கற்கும் மாணவன். எனக்கு அரபு மொழியும் தெரியாது. அது மிகக் கடினமான மொழி. இஸ்லாமிய விடயங்களை ஆங்கிலத்திலேயே வாசிக்கிறேன். இஸ்லாத்தை நல்ல நோக்கத்திற்காகவே கற்கிறேன். என்னால் ஏதும் தவறுகள் இடம்பெற்றால், அதற்காக ஆரம்பத்திலேயே மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.

இலங்கை- தாய்லாந்து சூழலில் இஸ்லாம் மற்றும் பௌத்தத்திற்கிடையிலான சகவாழ்வு என்ற தலைப்பிலான உரையை பிரதான மூன்று பகுதிகளாக பிரித்து நோக்கலாம். முதலாவதாக, இலங்கை- தாய்லாந்தின் நிலைமைகள் குறித்து ஆராயலாம். இரண்டாவது பகுதியில் நாம் எவ்வாறான சவால்களுக்கு முகங்கொடுக்கின்றோம் என்பதைப் பார்ப்போம். இறுதியாக, சவால்களுக்கான சாத்தியமான தீர்வுகள் குறித்து கலந்துரையாடலாம்.
இலங்கை- தாய்லாந்தின் சூழ்நிலைகளைப் புரிந்துகொள்வது முக்கியமானதாகும். அதனை இலகுவான முறையில் பார்ப்போம். இலங்கை அண்ணளவாக 21 மில்லியன் சனத்தொகை கொண்ட நாடு. தாய்லாந்தின் சனத்தொகை 65 மில்லியன்களாகும். இலங்கையில் 70 வீதமானவர்கள் பௌத்தர்களும் 10 வீதமான முஸ்லிம்களும் வாழ்கின்றனர். தாய்லாந்தில் 90 வீதமான பௌத்தர்களும், 10 வீதமான முஸ்லிம்கள் காணப்படுகின்றனர். இரு நாடுகளிலும் 10 வீதமான முஸ்லிம்களே வாழ்கின்றமை சுவாரஷ்யமான விடயமாகும். முஸ்லிம்கள் அங்கும் இங்கும் சிறுபான்மையினராக வாழ்ந்துவருகின்றனர். இரு நாட்டு அரசியலமைப்புகளும் மதச் சுதந்திரம், பாதுகாப்பு ஆகியவற்றை வழங்கியுள்ளன.
இலங்கைத் தீவில் பௌத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே பதட்டமான சூழ்நிலை வளர்ந்து வருவதை அவதானிக்க முடிகின்றது. யாரும் அதை மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. நாம் அது குறித்து சிந்தித்து, ஒன்றாக இணைந்து பணியாற்ற முயற்சிக்கவேண்டும். நாட்டை இது முஸ்லிம் பகுதி, இது பௌத்த பகுதியென்று துண்டுபோட முடியாது. நாம் எவ்வாறு ஒற்றுபட்டு வாழ முடியும் என்பது பற்றி சிந்திக்க
வேண்டும்.
தாய்லாந்தின் நிலைமை குறித்து எனது அனுபவத்தை பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். அங்கு 10 வீதமான முஸ்லிம்கள் உள்ளனர். தென் பகுதியில் மூன்று மாகாணங்களில் செறிந்து வாழ்கின்றனர். அம்மூன்று மாகாணங்களின் 80வீதமானவர்கள் முஸ்லிம்களே. பூகோளநீதியாக தெளிவான வேறுபாடுகள் தென்படுகின்றதை அவதானிக்கலாம். இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் செறிந்து வாழ்வதாக செவியுற்றேன். தாய்லாந்தின் அம்மூன்று மாகாணங்களில் இருந்து வெளியில் செல்லும்போது, பௌத்த நாடொன்றுக்கு செல்லும் உணர்வே தோன்றும்.
10 வருடங்களுக்கு முன்னர் நான் தாய்லாந்தின் முஸ்லிம்கள் செறிந்துவாழும் பகுதிக்குச் செல்லவேண்டிய தேவையேற்பட்டது. எமது மனைவி புத்தரிடம் என்னைப் பாதுகாக்கும்படி அதிகம் வேண்டினார். நான் அந்த பயணத்தை மறையாக கருதவில்லை. நான் மனைவிக்கு நன்றிகூறி, நான் எனது அலுவல் நிமித்தமே செல்வதாக கூறினேன்.
இஸ்லாத்திலும் பௌத்தத்திலும் பல்வேறுபட்ட உடன்பாடுகள் காணப்படுகின்றன. பௌத்தத்தில் ஒருவனே அனைத்தையும் நிர்வகிக்கின்றான் என்பது உள்ளது போன்றே இஸ்லாத்திலும் தௌஹீத், சுன்னதுல்லாஹ் போன்றன காணப்படுகின்றன. லா இலாஹ இல்லல்லாஹ் என்பதினூடாக அல்லாஹ்வே அனைத்தையும் ஆட்சி புரிகின்றான். அது மனிதனின் சக்தியை மீறியது. அதனாலேயே முஸ்லிம்கள் அல்லாஹ் நாடினால்(இன்ஷா அல்லாஹ்) என்ற பதத்தை பாவிக்கின்றனர்.
என்னைப் பொருத்தவரையில் முஸ்லிம்கள் தம்மால் இயன்ற கடின முயற்சியை மேற்கொண்டுவிட்டு இறுதியாக கூறுவதே இன்ஷா அல்லாஹ். நீங்கள் முயற்சிசெய்ய வேண்டும். இறைவன் தீர்மானிப்பான். அவ்வாறில்லையெனின் அது எனது பலத்தில் தங்கியிருக்கவேண்டும்.
பதட்ட நிலை காணப்படுகின்றது. துரதிஷ்டவசமாக பதட்டம் வன்முறையாக மாறுகின்றது. அது காயங்களை ஏற்படுத்தும். அதனாலேயே, முஸ்லிம்களும் பௌத்தர்களும் சகவாழ்வு குறித்து சிந்திக்க வேண்டும். இந்த பிரச்சினை குறித்து நாம் எந்தளவு அறிந்துவைத்துள்ளோம்? இதற்கான தீர்வென்ன? இதனையே நாம் கலந்துரையாடவேண்டும்.
இலங்கை- தாய்லாந்து இரு நாடுகளிலும் மில்லியன் கணக்கான மக்கள் வறியவர்களே. சமூகத்தில் என்ன நடக்கின்றது என்பது குறித்த அறியாதவர்கள். துரதிஷ்டவசமாக இவை அரசியல் ரீதியாக கையாளப்படுகின்றது. இங்கு அரசியல் அறிக்கை விடவேண்டியதில்லை. எனினும், ஓர் அறிஞனான நான் இதுகுறித்து பேசவேண்டியுள்ளது. உண்மைகளை விளங்கிக்கொள்ள வேண்டும். அரசியல், கல்விநிலை, வறுமை, அறியாமை, ஒற்றுமையின்மை போன்றனவும் சமூகத்தில் தாக்கம் செலுத்துகின்றன. இவ்வாறான பிரச்சினைகளே சமத்துவமின்மைக்கு இட்டுச் செல்கின்றன. சமத்துவமின்மை குறித்து சிறுபான்மையினர் ஏற்கனவே அறிந்துவைத்துள்ளனர். செல்வந்தர் மற்றும் ஏழைகளுக்கிடையிலான இடைவெளி, நகரத்துக்கும் கிராமத்திற்கும், அறிவு மற்றும் அறியாமை என அனைத்திலும் இடைவளியொன்றுள்ளது. இஸ்லாமும் பௌத்தமும் சமத்துவத்தை போதிக்கின்றது. அடுத்தது, நீதியின்மை. மக்களுக்கு மக்கள், அரச பணியாளர்களும் பொதுமக்களும், பொலிஸ் மற்றும் பொதுமக்கள் என நீதியின்மை நிலவுகின்றது. அதேபோன்று, ஒற்றுமையின்மை என்பது முஸ்லிம்களுக்கும் பௌத்தர்களுக்கும் மாத்திரமன்றி, முஸ்லிம்- பௌத்தத்திற்குள்ளும் காணப்படுகின்றது. சிறுபான்மையினருக்கிடையிலான ஒற்றுமையின்மை. இவ்வாறான விடயங்கள் சகவாழ்வு மற்றும் அபிவிருத்திக்கு சவாலாக அமைந்து விடுகின்றன. இப்பிரச்சினைகள் தீரும் போது சமாதானம் மலரும்.
இரண்டாம் பாகத்தில் எமக்குரிய சவால்களை நோக்குவோம். இலங்கை- தாய்லாந்து போன்ற பல்லின சமூகங்களை கொண்ட நாட்டில் எவ்வாறு சகவாழ்வை கட்டியெழுப்புவது? என்பது முக்கியமான கேள்வி யாகும். இந்த கேள்விக்கு பதில் கொடுப்பதே எமது எதிர்பார்ப்பாகும். சமாதானமும் சகவாழ்வும் கலந்து வாழ்வதிலும், கலந்துரையாடல்களை நடைமுறைப்படுத்துவதிலுமே உள்ளது. இன்று பௌத்தர்கள் பௌத்த பாடசாலைக்கும், முஸ்லிம்கள் முஸ்லிம் பாடசாலைக்கும் செல்கின்றனர். இவை பிரிவினையை ஊக்குவிக்கும். அதிகமாக கலந்துவாழ்வதே இன்றைய தேவை. அதற்காக இணைந்து பொது வேலைகளில், சமூக சேவைகளில் ஈடுபடலாம். சங்கா எனும் தாய்லாந்து அமைப்பு முஸ்லிம் உலமாக்களுக்கு பௌத்த மதத்தின் அடிப்படைகளை போதித்தது. பரஸ்பரம் நம்பிக்கைகள் பற்றி அறிந்துகொள்ள வேண்டும்.
இஸ்லாமிய அறிவையும் விஞ்ஞான அறிவையும் வைத்து நிலைமைகள் ஆராயப்பட வேண்டும். பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும். நாம் தாய்லாந்தில் வறுமை நிறைந்த முஸ்லிம் கிராமமொன்றுக்கு சென்றோம். அங்கு நிலைமைகளை ஆராய்ந்து ஸக்காத் திட்டத்தை நடைமுறைப்படுத்தினோம். இன்று அவர்கள் ஸக்காத் கொடுக்கும் கரங்களாக மாறியுள்ளனர். அல்ஹம்துலில்லாஹ். நாம் எமது முயற்சியை எடுத்தோம். அல்லாஹ் விடயத்தை சாத்தியமாக்கினான். இன்று ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றாலும் சமூக அபிவிருத்தி திட்டம் என்ற பெயரில் ஸக்காத் திட்டமே நடைமுறைப்படுத்தப்படுகின்றது. மக்கள் ஒவ்வொரு ரமழானிலும் அதிகமான ஸக்காத்தை எதிர்பார்க்கின்றனர். முஸ்லிம்கள் இஸ்லாத்தை நடைமுறைப்படுத்தும் நிலைமை வரவேண்டும். அக்கிராம மக்களிடம் இஸ்லாத்திலே தீர்வுண்டு என்கின்ற சிந்தனை இருக்கவில்லை. கல்வியில் இஸ்லாமிய சிந்தனைகள், கொள்கைகள் வருவதை நாம் அங்கீகரிக்கின்றோம். தரமான தொழில்முறையில் இஸ்லாமிய கொள்கைகள் கல்வியில் உட்செலுத்தப்பட வேண்டும்.
நாம் அண்மையில் உயர்தரப் பாடசாலையொன்றை ஆரம்பித்தோம். விஞ்ஞான பாடத்தில் விபச்சாரம் பற்றி கலந்துரையாடினோம். அதுபற்றிய அல்குர்ஆனின் போதனைகளை ஆராய்ந்தோம். தீர்வுகள் குறித்து பேசினோம். மாணவர்களும் இலகுவில் புரிந்துகொண்டார்கள். விஞ்ஞாணத்தில் இஸ்லாமிய விழுமியங்கள் உள்ளடக்கப்படவேண்டும். மதச் சார்பற்ற பாடங்கள் மதத்தால் வழிகாட்டப்பட வேண்டும். மதச்சார்பற்ற அறிவு எம்மை அழிவுக்கு இட்டுச் செல்லும். மதக் கல்வியை மதச் சார்பற்ற கல்வியில் இருந்து பிரிக்க முடியாது. எனவே, ஜாமிஆ நளீமிய்யாவில் ஆசிரியர்களுக்கு மதரீதியாக வழிகாட்டும் துறைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.
நான் கடந்த 10 வருடங்களாக சகவாழ்வு பற்றி பேசிவருகின்றேன். அடுத்த பரம்பரை மாணவர்கள் முரண்பாடுகள் இன்றி சமாதானமாக வாழவேண்டும் என்பதே எனது  நோக்கம். பிரிவினைகள் எம்முடன் முடிந்துவிடட்டும். சிறுவர்களின் பரம்பரை சமாதானமிக்கதாக இருக்க
வேண்டும். நான் இஸ்லாத்தைப் படித்தால்தானே முஸ்லிம்கள் சிந்திக்கும் விதத்தை அறிய முடியும். யாரும் யாருக்கும் மதங்களை திணிக்கமுடியாது. ஒவ்வொருவரும் விளங்கிக்கொள்ள வேண்டும்.
எனது மேசையில் குர்ஆனொன்றிருக்கும். நான் ஒவ்வொருநாளும் அதனை வாசிப்பேன். நான் அல்குர்ஆனிலிருந்து மூன்று வசனங்களை தெரிவுசெய்து எமது பாடசாலையில் காட்சிப்படுத்தியுள்ளேன். முதலாவது வசனத்தை அல் பாத்திஹாவிலிருந்து தெரிவுசெய்தேன். அது இஹ்தினாஸ் சிராதல் முஸ்தகீம் ” எங்களுக்கு நேரான பாதையை காட்டுவாயாக என்ற பிரார்த்தனையாகும். எனது பாடசாலை நேர் வழிகாட்டும் பாடசாலையாக இருக்கும் என்றே பெற்றோரிடம் கூறுவேன். இரண்டாவது, அல் பகராவிலிருந்து.  வகதாலிக ஜஅல்னாகும் உம்மதன் வஸதன் ” நாம் உங்களை நடுநிலையான சமூகமாக ஆக்கியுள்ளோம். நீங்கள் நடுநிலையாக இருக்கவேண்டும்.
நீங்கள் வஸதிய்யாவாக இருக்க வேண்டும் இலங்கையிலும் நடுநிலையான வஸதிய்ய சமூகமொன்றே தேவை.
மூன்றாவது அல்குர்ஆன் வசனத்தை பாடசாலை வெளியேறும் வாயிலில் பொறித்துள்ளோம். அதுதான்,  ரஹ்மதன் லில் ஆலமீன்” அகிலத்தாருக்கான அருட்கொடையாகும். நீங்கள் இஸ்லாத்தைப் படித்து நடுநிலைமையாக நடைமுறைப்படுத்துங்கள். நீங்கள் படித்தவற்றை உலகத்தாருக்கு கூறவேண்டும். முஸ்லிம்களுக்கு மாத்திரமன்றி அகிலத்தாருக்கே. இஸ்லாம் நடைமுறை மார்க்கமாகும்.
ஹராம், ஹலால் கோட்பாடு மிக முக்கியமானதாகும்.
ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை போதிக்கின்றது. எனினும் இன்று அது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. நான் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும்
புரிந்து கொள்ள ஆரம்பித்தேன். மக்கள் என்னிடம் எப்போது இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வீர்கள் என்று கேட்டார்கள். நான் அது அல்லாஹ்வின் நாட்டமாகும் என்று
கூறினேன். நான் இஸ்லாத்தின் விழுமியங்களையே பார்க்கின்றேன். இஸ்லாம் நம்பிக்கைகள், நடைமுறைகள் என இரண்டு பகுதிகளைக் கொண்டது.
இஸ்லாத்தின் இஹ்லாஸ், அமானத் என்ற விடயங்கள் பௌத்தர்களுடனும் பகிரப்பட வேண்டும்.
உளத்தூய்மை, நம்பிக்கை என்பன கட்டியெழுப்பப்படவேண்டும். அல்லாஹ்வின் வழிமுறையே முதன்மை வழிமுறை. உலகில் ஒரு வழிமுறையே, ஒரு வழிகாட்டலே இருக்கலாம். அதனை முஸ்லிம்கள் லா இலாஹ இல்லால்லாஹ் என்கின்றனர். அல்குர்ஆனில் கிறிஸ்தவம், யூதம் பற்றியும் கூறப்பட்டுள்ளது. அல்குர்ஆனின் வழிகாட்டல், அல்லாஹ்வின் ஞானம் (ஹிக்மத்) அவசியமானதாகும். அதிகமான முஸ்லிம்கள் பிரச்சினையின் போது அல்லாஹ், குர்ஆன், சுன்னாவை மறந்து வேறு வழிகளில் உதவி தேடுகின்றனர்.
இன்று இஸ்லாம் புதிய சவால்களை எதிர்நோக்குகின்றது. சவால்களை இஜ்திஹாத் மூலம் எதிர்கொள்ளலாம். இலங்கையில் இஜ்திஹாத் மேற்கொள்ளும் முஜ்தஹிதுகள் உள்ளனரா? நான் இந்த கேள்வியை ஜாமிஆ நளீமிய்யாவில்  கேட்டபோது, அங்கும் அரேபிய உஸ்தாத்மாரே உள்ளதாக கூறினர். இலங்கையில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு சவூதியில், யெமனில், எகிப்தில் இருந்து தீர்வுபெற முடியுமா? அவர்களின் தீர்மானங்கள் சரியானதாக அமையுமா? அவர்களுக்கு இங்குள்ள நேர, கால, சூழ்நிலைகள் தெரியுமா? அது சாத்தியமில்லை. எனவே, இலங்கைக்கென்றே முஜ்தஹித்கள் உருவாக்கப்பட வேண்டும். நாட்டுக்கு பொருத்தமான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இஸ்லாமிய சிந்தனைகள் கோட்பாடுகள், கல்வி, வழிகாட்டல்கள் அகிலத்தாருக்கு போதிக்கப்படவேண்டும். நல்லிணக்க, சமாதான கலந்துரையாடல்கள் அமர்வோடு முடிவடைந்துவிடக்கூடாது. சகவாழ்வு சமாதானத்தை கொண்டுவரும் செயற்பாடுகளிலும் கவனம்செலுத்த வேண்டும். அதுவே உண்மையான நல்லிணக்கமாக இருக்கும். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் இங்கு முஸ்லிம்கள் இருந்திருக்க முடியாது. அவர்கள் வியாபாரிகளாக இலங்கைக்கு வந்தார்கள். அவர்கள் நேர்மை, நீதி, உண்மை, தியாகத்துடன் இருந்தார்கள். முஸ்லிம்களின் விழுமியங்களை நாட்டில் பகிர்ந்தார்கள். இங்கிருந்தவர்களும் இஸ்லாத்தை ஏற்றனர். இன்று நாட்டில் 10வீத பிரஜைகளாக உள்ளனர். உதாரண புருஷர்களாகவும், முன்மாதிரிகளாகவும் இருந்தே இஸ்லாத்தின் விழுமியங்களை உலகுக்கு வழங்கவேண்டும். இஸ்லாம் வற்புறுத்தல்களால் இன்றி முன்மாதிரிகளால் இலங்கையிலும் தாய்லாந்திலும் வளர வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!