புது வாகனத்தைப் பெற  இப்படியொரு உடான்ஸ்?

பொருளாதாரம் தள்ளாடிக்கொண்டு இருக்கும் இன்றைய நிலையில் அமைச்சர்மார்களுக்கு வாகனங்கள் இறக்குமதி செய்வதற்காக 350 மில்லியன் ரூபா குறை நிரப்புப் பிரேரணை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டமை கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

எதிர்க்கட்சியினர் இப்போது எங்கு பார்த்தாலும் இதையே போட்டுத் தாக்குகின்றனர்.ஆனால்,அமைச்சர்கள் வாகனங்கள் வழங்கும் திட்டத்தை நியாயப்படுத்தியே பேசுகின்றனர்.புது வாகனம் கிடைப்பதென்றால் யார்தான் விடுவார்.

அமைச்சர் மஹிந்த அமரவீர தரப்பு இதை இவ்வாறு நியாயப்படுத்துகின்றது.கடந்த நான்கு மாதங்களுக்குள் நான்கு தடவைகள் அமைச்சரின் வாகனம் பழுதடைந்து நடு வீதியில் நின்றதாம்.

ஒரு தடவை இவ்வாறு பழுதடைந்து கொழும்புக்கு வர வாகனம் இன்றி அமைச்சர் தத்தளித்தபோது தங்காலையில் உள்ள லால் ஐயா என்று அறியப்படும் ஒரு தனவந்தரிடம் இருந்து வாகனத்தைப் பெற்றுக்கொண்டு கொழும்புக்குச் சென்றாராம் .

இன்னொரு தடவை பழுதடைந்தபோது அங்குனுகொலவில் உள்ள ஒருவரிடம் இருந்து வாகனம் ஒன்றை இரவல் வாங்கிக்கொண்டு கொழுப்புக்குச் சென்றாராம்.

இன்னொரு தடவை கூட்டம் ஒன்றுக்குப் போய்க்கொண்டிருக்கும்போது டயர் வெடித்து நடுவீதியில் நின்றாராம்.கூட்டம் ரத்தாகியதோடு ஒருவாறு வேறு வாகனம் ஒன்றைப் பிடித்து வீடு திரும்பினாராம்.

இவ்வாறு கடந்த நான்கு மாதங்களுக்குள் நான்கு தடவைகள் வாகனம் பழுதாகி அசொளகரீகத்தை எதிர்நோக்கினாராம் அமைச்சர்.முன்னைய ஆட்சியில் பிரதி அமைச்சர் ஒருவர் பாவித்த வாகனம் ஒன்றுதான் அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாம்.

இவ்வாறு அமைச்சர்களுக்குப் பழைய வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளமையால் அவை அடிக்கடி பழுதாகி மக்களிடம் சென்று சேவையாற்ற முடியாமல் அமைச்சர்கள் அவதிப்படுகிறார்கள் என்றும் அப்படியானதொரு நிலையில் அவர்களுக்கு புதிய வாகனங்கள் வழங்கப்படுகின்றமை நியாயம்தான் என்றும் அமைச்சர்கள் பலர் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

உண்மைதான்.நீங்கள் மக்களுக்காக படுகிற கஷ்டத்தைப் பார்த்தால் உங்கள் ஒவ்வொருத்தருக்கும் தனித் தனி ஹெலிகொப்டரே வழங்க வேண்டும் சேர்.புது வாகனத்தைப் பெற என்னா உடான்ஸ்.

[எம்.ஐ.முபாறக் -சிரேஷ்ட ஊடகவியலாளர் ]

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!