அழிவுகள்; ஆரம்பமேயன்றி இறுதியானதல்ல

(ஆதில் அலி சப்ரி)
நாட்டில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்த நிலை, வெள்ளப் பெருக்கு, மண் சரிவுகள் காரணமாக நூற்றுக்கணக்கான மனித உயிர்கள் பறிபோயின. இலட்சக் கணக்கானோர் வாழ்விடங்களை இழந்து, இடைத்தங்கள் முகாம்களில் வசித்து வருகின்றனர். நாடு மீண்டுமொருமுறை பேரிழிவொன்றை சந்தித்துள்ளது. இது அழிவுகளின் ஆரம்பமேயன்றி இறுதியானதல்ல.
கடந்த 2014ஆம் ஆண்டு பதுளை மீரியபெத்தை பிரதேசத்தில் ஏற்பட்ட மண் சரிவு பாரிய உயிர்ச் சேதங்கள் ஏற்படுத்தியது. மீரியபெத்தை மண் சரிவு விதியோ, இறைநாட்டமோ, இயற்கை அனர்த்தமோ அன்றி, மனித செயற்பாடுகளின் விளைவே என்பது போதிய சாட்சியங்களுடன் பிற்காலத்தில் வெளியாகியது. உமா ஓயா திட்டத்தின் பாதிப்பு காரணமாகவே மீரியபெத்தை அனர்த்தம் ஏற்பட்டது என்பதை சுற்றாடல் மற்றும் இயற்கைக் கற்கைக்கான மையம் ஆதாரபூர்வமாக விளக்கியிருந்தது.
எனினும், மீரியபெத்தை சம்பவத்தை இயற்கை அனர்த்தமாகவே பொறுப்புக்கூறவேண்டியவர்கள் காட்ட முயற்சித்தனர். அனர்த்தத்துக்கு பொறுப்பேற்க முடியாதபோது இயற்கையின் பேரிலோ, இறைவனின் பேரிலோ பழியை சுமத்திவிடுகின்றனர். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு, மண் சரிவு உட்பட அனைத்து அனர்த்தங்களையும் இயற்கை அனர்த்தம் என முடிச்சிட்டு, ஆட்சியாளர்கள் கைகளைத் துடைத்துக்கொள்ளப் பார்க்கின்றனர். எனினும் நாடு இன்று எதிர்நோக்கியுள்ள அனர்த்தங்களுக்கான காரணம், அபிவிருத்தி என்ற பெயரில் நாட்டில் மேற்கொள்ளப்படும் பாரிய சுற்றாடல் மாசுபடுத்தல்களாகும். நாட்டு மக்களும் ஆட்சியாளர்களின் தேவைக்கேற்ப சுற்றாடலை அழிக்கவிட்டு வேடிக்கை பார்க்கின்றனர். இயற்கை அனர்த்தமொன்று ஏற்படும் போதே மக்களுக்கு சுற்றாடல் குறித்த சிந்தனையேற்படுகின்றது.
அபிவிருத்தி வேலைத்திட்டங்களால் நாட்டின் 103 கங்கைகள் மற்றும் இயற்றை ஊற்றுக்கள் சிதைவடைந்துள்ளன. ஒவ்வொரு கங்கைக்கும் வெள்ளப் பெருக்கை கட்டுப்படுத்தும் சதுப்பு நிலங்கள் இயற்கையாகவே அமையப்பெற்றுள்ளன. அந்த சதுப்பு நிலங்களிலிருந்த அபிவிருத்திப் பணிகளுக்காக பாரியளவில் மண் வெட்டியெடுக்கப்படுகின்றன.
நீர் நிலத்துக்கு உரிஞ்சப்படுகின்ற இடங்களில் பாரிய கட்டடங்கள் நிர்மாணிக்கப்படுகின்றன. இதுவே பிற்காலத்தில் வெள்ளப் பெருக்குக்கும் மண் சரிவுக்கும் காரணமாக அமைந்துவிடுகின்றன.
களனி கங்கையைச் சூழவுள்ள சதுப்பு நிலப் பகுதிகள் அனைத்துமே அபிவிருத்தியின் நாமத்தில் அழிக்கப்பட்டுள்ளன. முத்துராஜவெல இயற்கைக் காட்டின் நீர் கடலுக்கு வடியும் பகுதியை முற்றாக தடுத்து கொழும்பு- கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. கொழும்பு இன்று முகங்கொடுக்கும் வெள்ளப் பெருக்கு அவதானத்துக்கு இதுவே பிரதான காரணமாகும்.
உலக வங்கியின் நிதியுதவியுடன் அதிவேக நெடுஞ்சாலை நிர்மாண பணிகளில் அதிக கமிஷன்களை ஈட்டிக்கொள்வதற்காக சுற்றாடல் பாதிப்புகள் குறித்து கரிசனைகாட்ட தவறிவிட்டனர். சுற்றாடல் தொகுதிகள், இயற்கைக் காடுகள், சதுப்பு நிலப்பகுதிகள் குறுக்கிட்டால் தூண்கள் எழுப்பி நெடுஞ்சாலைகள் அமைக்கும் முறையையே வெளிநாடுகள் பின்பற்றுகின்றன.
முத்துராஜவெல உட்பட அனைத்து அதிகவேக நெடுஞ்சாலைகளை நிர்மாணிக்கும்போது ஒவ்வொரு  கிலோ மீட்டரொன்றுக்கும் 240,000 கன மீட்டர் மணல், கனிய வளம் நிறப்பப்படுகிறது. நீர் வடிந்தோடும் பகுதிகளை ஊடறுத்து இவ்வாறான நெடுஞ்சாலைகளை அமைத்துவிட்டு வெள்ளம் வருவதையும், உயிராபத்துக்கள் நிகழ்வதையும் தடுக்கலாமா?
அதேபோன்று, தெற்கு அதி
வேக நெடுஞ்சாலையும் கடலுக்கு வடிந்துசெல்லும் நீர் வழிகளை மாத்தறை வரையே தடுக்கின்றது. இதுமாத்திரமன்றி, நாட்டைச் சூழ அதி
வேக நெடுஞ்சாலைத் தொடரொன்று அமைக்கப்படவுள்ளது. இதனால், மலைகளில் இருந்து வடிந்தோடும் 103க்கும் மேற்பட்ட கங்கைகளின் நீர் கடலைச் சென்றடைவது பல வழிகளிலும் தடைப்படுகின்றது. இதனால் சிறிய
தோர் மழைக்கும் நாட்டில் வெள்ளப்பெருக்கு ஏற்பட ஏதுவாகின்றது. மேற்படி நிலையை கடுவெல, ஜா-எல பிரதேசங்களை அவதானிக்கின்றபோது புரிந்துகொள்ளலாம்.
பாரியளவிலான நீர் ஊற்றுக்களைக் கொண்டுள்ள மத்திய மலைநாடு இயற்கை நீர் சேமிப்பகமாக தொழிற்படுகின்றது. அது தேவையான நீரை தன்னகத்தே சேமித்துக்கொண்டு மேலதிகமானதை நீரூற்றுக்கள், கங்கைகள் மூலம் கடலுக்கு வடிந்தோடச்செய்கின்றது. இவ்வாறு வடிந்தோடும் நீர் வழிகள் தடைப்படுகின்றபோது, தேவைக்
கதிகமான நீர் தேங்கி, மண்வளம் கரைய ஆரம்பிக்கும். இதனாலேயே, மத்திய மலைநாடு, மலைப் பிரதேசங்களில் பாரிய மண்சரிவுகள் ஏற்படுகின்றன. நீர் வடிந்துசெல்லும் நீர் வழிகள் அபிவிருத்திப் பணிகளுக்காக கொங்க்ரீட் இடப்படுகின்றமையாலே இந்நிலையேற்படுகின்றது. வெறுமனே இயற்கையின் சீற்றத்தால் மாத்திரமல்ல.
மத்திய மலைநாட்டில் சிறிய, பெரிய நீர் மின்னுற்பத்தி நிலையங்கள், காடழிப்பு, சுரங்கங்கள் அமைத்தல் போன்றவற்றால் இயற்கை அழிக்கப்படுகின்றது. அது மீரியபெத்தை, அரனாயக்க சாமசர கந்த, நிகலோயா, கிரிபத்கந்த, இரத்தினபுரி பொத்குல் கந்த போன்ற மண் சரிவுகளுடன் நின்றுவிடப்போவதில்லை. இந்த அரசாங்கத்திலும் சுற்றாடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுமாயின் ஒவ்வொருவருடமும் அனர்த்தங்களுக்கு முகங்கொடுக்க நேரிடும்.
உலக வங்கியின் நிதியுதவியுடன் இலங்கையில் 2011 – 2030 தேசிய பௌதீக திட்டம் என்ற பெயரில் நாட்டின் பௌதீக அபிவிருத்தித் திட்டமொன்று செயற்படுத்தப்பட்டு வருகின்றது. 2030ஆம் ஆண்டாகும்போது உலகின் கடற்படை, விமான, பொருளாதார, மின்சக்தி, கல்வி மையமாக இலங்கையை மாற்றும் திட்டத்தின் அடிப்படையில் 2005ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4ஆம் திகதி இந்தியா, சீனா உட்பட 36 நாடுகளுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் படியே இலங்கை பயணிக்கின்றது.
2030ஆகும்போது இலங்கையில் நிர்மாணித்து முடிக்கப்படவுள்ள அதிவேக நெடுஞ்சாலைகளின்
நீளம் 11, 697 கிலோ மீற்றர்களாகும்.
2030ஆம் ஆண்டாகும்போது இலங்கையின் மொத்த விமான நிலையங்களின் எண்ணிக்கை 19ஆக அதிகரித்திருக்கும்.
100 ஸ்மார்ட் நகரங்கள், மாவட்ட தலைநகரங்கள், முதலீட்டு வலயங்கள், இலத்திரனியல், தகவல் தொழிநுட்ப நகரங்களையும் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.
கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தால் முத்துராஜவல சரணாலயம் அழிக்கப்பட்டதோடு, எதிர்வரும் அதிவேக நேடுஞ்சாலைத் திட்டங்களால்
சிங்கராஜவனம் இரண்டாக பிரியும் நிலைமையும், 39க்கு மேற்பட்ட பிரதான காடுகள் மற்றும் சரணாலயங்கள் அழிவுக்குள்ளாகும் அவதானமும் உள்ளது.
சூழல், சுற்றாடலுக்கு ஏற்படும் பாதிப்புகளை கவனத்திற்கொள்ளாது மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களால் வெள்ளப் பெருக்கு, மண் சரிவு போன்றே பிற்காலத்தில் பாரிய வரட்சியொன்றுக்கும் முகங்கொடுக்க
வேண்டிய நிலையேற்படும்.
இயற்கைக்கு பாதிப்பற்ற நிலையான அபிவிருத்தி திட்டங்கள் குறித்து நாடு கவனம் செலுத்தாதவரையில் வெள்ளம், மண்சரிவு, வரட்சி, பாரிய உயிர்ச் சேதங்களை கட்டுப்படுத்தமுடியாது.
இன்று நாடு முகங்கொடுத்துள்ள பேரழிவு 200க்கும் மேற்பட்ட மனித உயிர்கள் பலியெடுத்துள்ளது. கோடிக்கணக்கான சொத்துகள் அழிந்துபோயுள்ளன.
உயிர்ச்சேதங்கள் ஏற்படும்போது குரல்கொடுப்பதும், வெள்ளம் வற்றியதும் மறந்துவிடுவதும் இந்நாட்டின் வழமை. ஆட்சியாளர்களும் அபிவிருத்தியென்ற பெயரில் கமிஷன் வியாபாரத்தை ஆரம்பிப்பர். மக்களும் வழமைபோல் அமைதி காப்பர்.
சுற்றாடல் பாதிப்புகளுடன் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களுக்கெதிராக மக்கள் குரல்கொடுக்காதவரையில் மனித உயிர்களை பலிகொடுக்கும் நிலைமை தொடரும்.
(கலாநிதி ரவீந்திர காரியவசத்துடன் மேற்கொண்ட உரையாடலைத் தொடர்ந்து எழுதப்பட்டது- ஆதில் அலி சப்ரி)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!